பதிவுத்துறை ஆண்டு இலக்கு ரூ.14,435.25 கோடியாக நிர்ணயம்: முழுக் கவனம் செலுத்த அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவு

By செய்திப்பிரிவு

2020-21ஆம் நிதியாண்டிற்கு அடைய வேண்டிய வருவாய் ரூ.14,435.25 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வீரமணி வலியுறுத்தினார்.

இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் பதிவுத்துறையின் அக்டோபர் 2020 மாதாந்திரப் பணி ஆய்வுக் கூட்டம் இன்று பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத்துறைத் தலைவர் சங்கர், அனைத்துக் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர்கள், நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் அனைத்து மண்டலத் துணைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் (தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள் (முத்திரை) / தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவிச் செயற்பொறியாளர்கள், சென்னை மற்றும் மதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வணிகவரித்துறை அமைச்சர், அரசின் வருவாயை உயர்த்துதல் குறித்து ஒரு உத்வேகத்தை ஏற்படுத்த இக்கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். 2020-21ஆம் நிதியாண்டிற்கு அடைய வேண்டிய வருவாய் ரூ.14,435.25 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழுக் கவனம் செலுத்த அனைத்து அலுவலர்களையும் கேட்டுக்கொண்டார்.

வருவாய் இலக்கினை அடைவதற்காக நிலுவை ஆவணங்கள் சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களைத் தாமதமின்றிப் பதிவு செய்தல் முதலான உத்திகளைக் கையாண்டு வருவாய் இலக்கினை அடைந்திட அரசு செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது.

ஆவணங்கள் பதிவு நாளன்றே திரும்ப வழங்கியுள்ளனரா என்பது குறித்து அமைச்சரால் ஆய்வு செய்யப்பட்டது. 100 சதவீதம் மற்றும் 99 சதவீதம் ஆவணங்கள் ஆவணதாரருக்குப் பதிவு நாளன்றே திரும்ப வழங்கப்பட்ட அலுவலகங்கள் குறித்துப் பாராட்டப்பட்டது. பதிவு நாளன்றே ஆவணங்களைத் திரும்ப வழங்குவதில் தாமதிக்கும் அலுவலகங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அமைச்சரால் நிலுவை ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதிக அளவில் நிலுவையிலுள்ள அலுவலகங்களை மாதந்தோறும் துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் திடீராய்வு மற்றும் இதர ஆய்வுகளின்போது கண்டறிந்து நிலுவையினைக் குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவுத்துறைத் தலைவரால் அறிவுறுத்தப்பட்டது.

அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தினைத் தூய்மையாக வைத்துப் பராமரிக்க வேண்டும் எனவும், கோவிட்-19 தொற்று ஏற்படாவண்ணம் கை கழுவும் வசதி ஏற்படுத்தித் தருதல், தனி மனித இடைவெளியை உறுதி செய்தல், கிருமி நாசினியை உபயோகப்படுத்துதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், ஆவணப் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு மனநிறைவான அனுபவத்தினை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அரசு செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு அலுவலகத்திலும் தீயணைப்புக் கருவியினை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47 A (1) மற்றும் 47 A (3(3)இன் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அரசுக்கு வருவாய்க் கசிவு ஏற்படா வண்ணம் ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சீட்டு மற்றும் சங்கம் தொடர்பான பணிகள் குறித்து சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. சீட்டு மத்தியஸ்த வழக்குகளை விரைந்து முடிக்க அமைச்சர் வீரமணி அறிவுறுத்தினார். அனைத்து அலுவலர்களும் சீரிய முறையில் பணியாற்றவும், வருவாய் இலக்கினை அடைந்திடவும் அமைச்சர் அறிவுறுத்தினார்”.

இவ்வாறு பதிவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

வாழ்வியல்

17 mins ago

தமிழகம்

33 mins ago

கருத்துப் பேழை

55 mins ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்