நிறைவேற்றப்படாத சென்னைக்கான குடிநீர் திட்டங்கள்: தீர்க்கதரிசனம் இல்லாத அரசு: துரைமுருகன் விமர்சனம் 

By செய்திப்பிரிவு

சென்னைக்கான குடிநீர் திட்டங்கள் எதையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை, இன்றும் சென்னை மக்கள் தாகம் தீர்க்கும் விஷயத்தில் தீர்க்கதரிசனமற்ற அரசாகத்தான் அதிமுக அரசு உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“சென்னை மாநகரத்துக்கு குடி தண்ணீர் கீழ்க்கண்ட திட்டங்கள் மூலம் கிடைக்கிறது. 1. பூண்டி, 2.புழல், - இவை இரண்டும் காங்கிரஸ் ஆட்சியில்நிறைவேற்றப்பட்ட திட்டங்கள். 3. நெம்மேலி, 4.வடசென்னை - இவை இரண்டும் கடல்நீரை குடிநீராக்க தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

5. செம்பரம்பாக்கம், 6.போரூர், 7.சோழவரம் - இவை மூன்றும் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது குடிநீருக்காக மாற்றப்பட்ட ஏரிகள். 8. கிருஷ்ணா நதிநீர் திட்டம் - தலைவர் கலைஞரால், நிறைவேற்றப்பட்டு, சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

9.புதிய வீராணம் - இது அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம்.

இத்தனை திட்டங்கள் இருந்தும் சென்னை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு தர வேண்டிய 1200 எம்.எல்.டி.-க்கு பதில் 700 எம்.எல்.டி.தான் தரப்படுகிறது.

தலைவர் கலைஞர் இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களையும், கிருஷ்ணா நதிநீர் திட்டத்தையும் கொண்டு வந்ததோடு, செம்பரம்பாக்கம், போரூர், சோழவரம் ஆகிய பாசன ஏரிகளை குடிநீருக்கான ஏரிகளாக மாற்றாமல் இருந்திருந்தால், இந்த 700 எம்.எல்.டி. தண்ணீர், சென்னை மக்களுக்கு குடிநீராக கிடைத்திருக்காது.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட புதிய வீராணத் திட்டம் வெறும் 180 எம்.எல்.டி., கொண்ட திட்டம். இதைத் தவிர, அதிமுக ஆட்சியில் சென்னை மக்களின் குடிநீருக்காக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. துரும்பை போடவில்லையே தவிர, குடிநீருக்கென மலை மலையான திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், பத்தாண்டுகளாக படுத்துக் கொண்டே இருந்தது இந்த திட்டங்கள்.

2012-ம் ஆண்டு சட்டசபையில், அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110-விதியின்கீழ் ஒரு அறிக்கையை படித்தார்கள். அதில், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்று நெம்மேலியில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

பத்தாண்டுகளாக மறந்துபோன திட்டத்தை தலைவர் தளபதியும், நானும் திருப்பி திருப்பி சட்டசபையில் கேட்டதற்கு, பிறகு, இந்த திட்டத்திற்கு நிதியை கடனாக தருகின்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனமான (KIW) வேலை துவங்குங்கள் இல்லாவிட்டால், நிதிஉதவி கிடைக்காது என்று சொன்னதற்கு பிறகு, இந்த திட்டத்திற்கு மானியமாக நிதிஉதவி அளிக்க முன்வந்த அம்ரூட் திட்டமும் மிரட்டியதற்கு பிறகு 27.6.2019 அன்று முதலமைச்சர் எடப்பாடி இந்த திட்டம் ரூ.1,259.38 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்து அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

ஆக, ஒரு திட்டத்தை அறிவித்து, அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட, பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது அதிமுக அரசுக்கு. சபாஷ் - சரியான சாதனை இந்த அதிமுக ஆட்சி தொடர்ந்தால் திட்டம் நிறைவேற முப்பது ஆண்டுகள் ஆகும்.

இந்த திட்டத்தோடு அறிவித்த பட்டிபுலம் திட்டம் 400 எம்.எல்.டி. என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதுவரை சென்னை மக்கள் தாகத்தை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றுகூட கூறுவார்கள். இந்த ஆட்சியில் இருப்போருக்கு தீர்க்க தரிசனம் என்பது அறவே கிடையாது என்பதற்கு ஓர் உதாரணம்.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்துதான் நாம் கிருஷ்ணா நீரை எடுக்கிறோம். 23.8.2020 தேதி நிலவரப்படி ஸ்ரீசைலம் அணையிலிருந்து 4,34,800 கனஅடி தண்ணீர், அதாவது 37 டி.எம்.சி. நீர் வீணாக கடலுக்கு போகிறது.

வரும் வழியில் சோமசீலா அணை, கண்டலேறு அணை ஆகிய நீர்த்தேக்கங்களில் கிருஷ்ணா நீரை தேக்கி, அதன்பின்னர்தான் நாம் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநதி நீரை கொண்டு வருகிறோம். சோமசீலாவில் 33 டி.எம்.சி. இருக்கிறது. அங்கு 23 டி.எம்.சி. இருந்தாலே தமிழ்நாடு அங்கு தண்ணீர் எடுக்கலாம்.

கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இப்போது 20 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. நாம் அந்த நீர்த்தேக்கத்தில் 8 டி.எம்.சி. நீர் இருந்தாலே தண்ணீர் எடுக்கலாம். இந்நிலையிலும், அதிமுக அரசு ஆந்திர அரசை தண்ணீர் கேட்டு ஒரு கடிதம்கூட எழுதவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

கேட்டால், நமக்கே மழை சீசனில் தண்ணீர் வரும் என்பார்கள். இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறார்கள். கடைசியில் சென்னைக்கு குடிநீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. “நாளைக்கு வரும் பலாக் காயைவிட, இன்றைக்குக் கிடைக்கம் கலாக் காயே மேல்” என்றோர் பழமொழி உண்டு”.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்