மதுரை சந்தைகளில் 30% பேர்தான் முகக்கவசம் அணிகிறார்கள்: ஆய்வில் தகவல்

By கே.கே.மகேஷ்

தென் மாவட்டங்களிலேயே மிக மிக அதிக கரோனா தொற்றாளர்களைக் கொண்ட மாவட்டம் என்ற பெயரை மதுரை பெற்றிருக்கிறது. சென்னையிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானவர்களை கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட எந்தத் தணிக்கையும் செய்யாமல் அப்படியே வீட்டிற்கு அனுப்பியிருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

சென்னை கோயம்பேடு போல மதுரை சந்தைகளும் நோய் பரப்பும் இடங்களாக மாறிவிடக்கூடாது என்று சந்தைகளைக் கண்காணிக்கவும், மக்கள் முகக்கவசம் அணிகிறார்களா என்று ஆய்வு செய்யவும் சு.வெங்கடேசன் எம்.பி. ஒரு ஏற்பாடு செய்தார். அதன்படி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றைச் சார்ந்த இளைஞர்கள், மாணவர்கள் சுமார் 100 பேர் முழு இரவும் சந்தைகளில் ஆய்வு செய்தனர்.

ஜூன் 9-ம் தேதி இரவு 11 மணி முதல் 10-ம் தேதி அதிகாலை 4 மணி வரை மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மார்க்கெட், மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட், நான்குவழிச் சாலையிலுள்ள வண்டியூர் மார்க்கெட், பரவை மார்க்கெட், கீழமாசிவீதியில் இயங்கும் மொத்த வியாபாரப் பகுதி ஆகியவற்றில் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் குறித்து இந்த ஆய்வு நடந்தது. அதில், வெறுமனே 30 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருப்பது தெரியவந்தது.

இந்த ஆய்வு விவரம் முழுவதையும் இன்று சு.வெங்கடேசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
மாட்டுத்தாவணி காய்கனி மார்க்கெட்:
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 647 பேர்
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 362 பேர்
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 570 பேர்
மொத்தம்: 1,579 பேர்
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 40 சதவீதம்.

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்:-
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 330 பேர்
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 197 பேர்
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 245 பேர்
மொத்தம்: 772 பேர்
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 42 சதவீதம்.

மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்:-
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 139 பேர்
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 37 பேர்
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 49 பேர்
மொத்தம்: 225 பேர்
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 62 சதவீதம்.

வண்டியூர் மார்க்கெட்:
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 95 பேர்
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 32 பேர்
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 23 பேர்
மொத்தம்: 150 பேர்
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 63 சதவீதம்.

பரவை மார்க்கெட்:-
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 637 பேர்
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 2,085 பேர்
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 815 பேர்
மொத்தம்: 2,537 பேர்
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 25 சதவீதம்.

கீழவாசல் - வாகன ஓட்டுநர்களும் சுமைதூக்குவோரும்:-
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 474 பேர்
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 1,245 பேர்
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 222 பேர்
மொத்தம்: 1,941 பேர்
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 24 சதவீதம்.

யானைக்கல் - வாகன ஓட்டுநர்களும் சுமைதூக்குவோரும்:
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 389 பேர்
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 1,148 பேர்
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 222 பேர்
மொத்தம்: 1,759 பேர்
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 22 சதவீதம்.

* சந்தை ஆய்விற்கு உட்பட்டவர்கள்: 8,963 பேர்
* முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் எண்ணிக்கை: 2,711 பேர்
* முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் மொத்த சராசரி: 30 சதவீதம்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் நம்மிடம் பேசுகையில், “கோயம்பேடு அனுபவம் தமிழகம் முழுவதற்கும் பெரும் பாடத்தினைக் கற்றுக் கொடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் பகுதியிலிருந்து வெங்காயம் கொண்டுவந்த வாகனங்களும் அவற்றில் வந்தவர்களுமே கோயம்பேடு கரோனா தொற்றின் ஊற்றுக்கண் என்பது பலரின் கருத்து.

இந்நிலையில், கடந்த வாரம் சென்னையிலிருந்து மதுரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதையொட்டி, அங்கிருந்து வரும் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும் என்று ஜூன் 8-ம் தேதி, ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினேன். அப்பொழுதே மதுரையில் இயங்கும் சந்தைகளைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டும். பல மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் தினசரி எண்ணற்ற வாகனங்களில் மனிதர்கள் சந்தைக்குப் பொருள் கொண்டு விற்கவும் வாங்கவும் வருகிறார்கள்.

அவர்களில் யாருக்கேனும் தொற்று இருந்தால் அது ஒரே நாளில் பலமடங்காக பல பகுதிகளுக்கும் பரவும். எனவே, முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் பயன்பாடு, தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்துங்கள் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். ஓரிரு நாள்களில் நாங்கள் மதுரையில் இயங்கும் சந்தைகளை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறோம் என்றும் தெரிவித்தேன்.

அதன்படி எங்கள் குழுவினர் மதுரையில் உள்ள சந்தைகளில் 8,963 பேரை ஆய்வு செய்ததில் 2,711 பேர் மட்டுமே முறையான முகக்கவசம் அணிந்தவர்களாக உள்ளனர். அதாவது 30 சதவீதம் பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனர். சந்தையைக் காப்பாற்றுவது மொத்த சமூகத்தையும் காப்பாற்றுவதற்குச் சமம். மதுரையில் இயங்கும் சந்தைகள் மதுரைக்கானவை மட்டுமல்ல, அருகிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கும் ஆனவை.

எனவே, பொதுமக்கள் சந்தைக்கு வரும்பொழுதும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விழிப்புணர்வோடு செயல்படுங்கள். அரசு நிர்வாகம் சந்தைகளைக் கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும். ஆய்வு செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றைச் சார்ந்த தோழர்களுக்கும், ஆய்வுக்கு ஒத்துழைத்த மாநகரக் காவல்துறைக்கும் எனது நன்றி” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

சினிமா

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்