58 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் இயக்கம்: முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியுடனும் மக்கள் பயணம்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் 58 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் உள்ளூர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்திலும் வரும் 31-ம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. மாநிலத்துக்குள்ளேயே உள்ளூர் பேருந்துகளை இயக்குவது, கார், ஆட்டோக்கள் இயக்கம், கடைகள், உணவகங்கள் இரவு 7 மணி வரை திறந்திருக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளான கோரிமேடு, நல்லவாடு, கொம்பாக்கம், வில்லியனூர், டி.என்.பாளையம் என 5 வழித்தடங்களில் மட்டும் உள்ளூர் பேருந்து சேவை இன்று (மே 20) தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும், பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் பயணிகள் இருக்கையில் அமரும்போது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன்பும், பேருந்து வந்த பின்பும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

அதேபோல், புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்குச் செல்லும் வழியில் தமிழகப் பகுதியான கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டி இருப்பதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் புதுச்சேரி அரசு பேருந்து தமிழகத்தின் வழியாக செல்வதற்கு அனுமதி கேட்டு இருந்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் நாகை மாவட்டம் வழியாக காரைக்காலுக்கு புதுச்சேரி பேருந்துகளை இயக்க இரு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்துள்ளனர். மேலும், புதுச்சேரி அரசுப் பேருந்துகள் தமிழகப் பகுதிகளில் நிறுத்திப் பயணிகளை ஏற்றாமல் நேரடியாக காரைக்காலுக்கு இயக்க வேண்டுமென நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாளை (மே 21) முதல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடைநில்லாப் பேருந்து சேவை காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மதியம் 12.30 மணிக்கு பேருந்து புறப்படும். ஊரங்கினால் 58 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் தற்போது இயங்கத் தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "பொதுமக்கள் நலன் கருதி புதுச்சேரி அரசு விரைவுப் பேருந்து மற்றும் நகரப் பேருந்துகள் இயக்க ஆணையிட்டுள்ளது. அதன்படி நகரில் 5 வழித்தடங்களில் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

நாளை முதல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடைநில்லாப் பேருந்து இயக்கப்படுகிறது. பயணிகள் வரவேற்பைப் பொறுத்து அதிகப்படியான பேருந்துகள் இயக்க ஆவன செய்யப்படும். பேருந்துகளில் அரசு உத்தரவுப்படி முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியுடன் பயணிகள் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இயக்கப்படுகிறது. பேருந்துகளில் கிருமி நாசினிகளும் தெளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் இயக்கப்படுகின்றன" எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்