கரோனா: 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை; பொதுமக்கள், தன்னார்வார்களுக்கு உதவி எண்கள்; அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா குறித்து மக்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"கரோனா வைரஸைத் தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தமிழக கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கிறது. கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழக அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முதல்வர் சொன்னது போல 'வீட்டில் இருங்கள், விலகி இருங்கள், விழிப்புடன் இருங்கள்'. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார். மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உயர்மட்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது.

இந்தியா பல சவால்களை சந்தித்திருக்கிறது. ஒழிக்க முடியாது என்று சொன்ன பெரியம்மையை ஒழித்துவிட்டோம். இளம்பிள்ளைவாதத்தையும் ஒழித்துக் கட்டினோம். எந்த வகையான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழகம், இந்தியா திறன் பெற்றிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாதது இந்த கரோனா வைரஸ். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து 3 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். அதன் மூலம், நாம் மூன்றாவது கட்டத்துக்கு செல்ல முடியாமல் தடுக்க முடியும்.

கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கென தமிழக அரசு 3,850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மக்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு 24 மணிநேரமும் அறியலாம். 044-2538 4520 என்ற சிறப்பு எண்ணை தொடர்புகொள்ளலாம். இதுவரை இந்த எண்ணுக்கு 2,000 அழைப்புகள் வந்துள்ளன. மக்கள் அதிகமாக விழிப்புணர்வு பெற்றுள்ளதைத்தான் இது உணர்த்துகிறது.

தன்னார்வலர்கள் 044-2538 4530 என்ற 24 மணிநேரம் இயங்கக்கூடிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு 4,033 தன்னார்வலர்கள் தொடர்புகொண்டுள்ளனர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், அவர்களை தனிமைப்படுத்துதல், மருத்துவ உதவிகளை அளித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நடவடிக்கைகள்.

சென்னையை பொறுத்தவரை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கும் என சந்தேகப்படும் 24 ஆயிரம் நபர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சென்னையில் 200 வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் மூலமாக தெளிக்கப்படுகின்றன. ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனையும் வெற்றியடைந்துள்ளது. அதுவும் விரிவுபடுத்தப்படும்.

சென்னையில் 2,064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் நின்ற 1,024 பேர் மாநகராட்சி சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசைக் கேட்டுள்ளோம். சாலையில் உள்ள பிச்சைக்காரர்கள் போன்றவர்களையும் காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்