தமிழக மீனவர்கள் படகின் மீது துப்பாக்கிச் சூடு: உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

By செய்திப்பிரிவு

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (பிப்.21) வெளியிட்ட அறிக்கையில், "நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இரவு 11 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென்று மீனவர்களின் விசைப்படகை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் அப்படகின் கண்ணாடி உடைந்து, உள்ளே இருந்த ஜேசு என்ற மீனவரின் கண் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, விசைப்படகில் இருந்த மீன்பிடிச் சாதனங்களையும் இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தினர். இது இலங்கைக் கடற்படையின் அராஜகத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் அச்சத்தோடு அங்கிருந்துத் தப்பித்துக் கரை சேர்ந்தனர். பிறகு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டிருப்பதும், கடந்த வாரம் புதுக்கோட்டை மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்றதும், இதனைத் தொடர்ந்து இப்போது தமிழக மீனவர்களின் படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் இலங்கைக் கடற்படையின் தொடர் அடாவடித்தனத்தை எடுத்துக்காட்டுகிறது.

இப்படி தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலும், சிறைப்பிடிப்பும், மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் ஈட்ட முடியாமல் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.

நட்பு நாடான இலங்கை - தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என தொடர்ச்சியாக செய்து வருகிறது. கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் இந்தியப் பிரதமரையும் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசியதாகக் கூறப்பட்டது.

ஆனால், அவர்களின் இந்தியப் பயணம் முடிந்து சென்ற ஓரிரு நாட்களில் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே, மத்திய அரசு இனியும் பொறுமை காக்காமல் தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இனியும் தொடராமல் இருக்க உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைத்திட வழிவகுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்

'கரும்பு நிலுவைத் தொகையை உடனே தருக': விருதுநகர் ஆட்சியர் முன் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

போர்க்குற்றவாளிகளைக் காக்க இலங்கை சதி: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா?-அன்புமணி கேள்வி

ஈஷா மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் இன்று கோவை வருகை

நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரும் தமிழக அரசு தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு நிகரானது: மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

ஓடிடி களம்

14 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்