

நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலைசெய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு நிகரானது என மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் வாதிட்டார். அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதிகுறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கடந்த 2018செப்.9 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ எங்கள் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்த மறுநாளே எங்களை விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் இதுவரைஎடுக்கவில்லை. எனவே நான் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்தபிறகும், சட்டவிரோதமாக சிறை தண்டனையை அனுபவித்து வருவதால் என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
தமிழக அரசு நிராகரிப்பு
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர். பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மத்திய அரசின்சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், ‘‘இந்த வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே சிறை தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிப்பதுதான். இந்த 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டே நிராகரித்துவிட்டது. அதன்பிறகு மத்திய அரசை கலந்தாலோசிக்காமல், தமிழக அமைச்சரவை இந்த 7 பேரையும் விடுவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றினால் அது செல்லாது.
அதன் நிலைப்பாடு பூஜ்ஜியத்துக்கு நிகரானது. மேலும் இதுதொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பதாக இருந்தாலும் மத்திய அரசை கலந்து ஆலோசித்தபிறகே முடிவெடுக்க முடியும். மேலும் மாநிலஅரசு, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றமும் கூட இதுதொடர்பாக ஆளுநருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என வாதிட்டார்.
அதேபோல தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தனது வாதத்தில், ‘‘ இந்த 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் தமிழக அரசின் கடமை முடிந்துவிட்டது.
மேலும் இதுதொடர்பாக ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தமிழக அரசால் கொடுக்க முடியாது. அவருடைய அதிகாரம், செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறை தண்டனையை அனுபவித்து வரும் நளினி, தற்போது சட்டவிரோதமாக சிறை தண்டனையை அனுபவித்து வருவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார்.
நளினி தரப்பு வழக்கறிஞர்
நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ‘‘தமிழக அரசை மத்திய அரசும், ஆளுநரும்தான் இயக்கி வருவது போல உள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் மீதுஇதுவரை ஆளுநர் எந்த முடிவும்எடுக்காமல் உள்ளார். அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஆளுநர் கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும்’’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரான நளினி தற்போது சட்டப்பூர்வமாக சிறையில் உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். எனவே இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.