அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரியை அரசு வேளாண் கல்லூரியாக மாற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.17) வெளியிட்ட அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து அடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அங்கமாகச் செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரியைப் பிரித்து, அரசு வேளாண் கல்லூரியாக அறிவித்து நடத்த வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை ஆகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதற்கு எத்தனை காரணங்களும், எவ்வளவு நியாயங்களும் இருந்தனவோ, அதைவிட அதிகமான காரணங்களும், நியாயங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியைத் தனி அரசுக் கல்லூரியாக மாற்றுவதற்கு உள்ளன.

மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டால், மருத்துவ மாணவர்களுக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.5 லட்சம் குறையும் என்பது தான் மிகவும் முதன்மையான காரணமாக இருந்தது. ஆனால், வேளாண் கல்லூரியைப் பொறுத்தவரை கட்டணத்தையும் தாண்டி ஏராளமான காரணங்கள் உள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஈடு இணையற்ற உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும், அந்தக் கல்லூரியில் வழங்கப்படும் பட்டங்களின் தரம் குறித்து ஐயங்கள் பல்வேறு எழுப்பப்படுகின்றன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டபோது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண்மைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படித்து பட்டம் பெற்று, பின்னாளில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வந்தவர்களே, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டத்தின் மதிப்பை குறைத்துக் காட்டினர். அதனால், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் படிப்பின் தரத்தை மேம்படுத்தியாக வேண்டியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அதைச் சமாளிக்கும் நோக்குடன் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் கூட போதிய அளவில் இல்லை.

அதுமட்டுமின்றி, அந்தப் பல்கலைக்கழகம் தனியார் நிர்வாகத்தில் இருந்தபோது அளவுக்கு அதிகமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் அவர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை மற்ற கல்லூரிகளுக்கு பணி நிரவல் செய்ய முடியாத நிலை நிலவுவதால் வேளாண் கல்லூரியின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி அண்ணாமலைப் பல்கலை. வேளாண் கல்லூரியில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி 70 ஆண்டுகளுக்கு முன்பே 1951-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். வேளாண் கல்லூரி வளாகம் மட்டும் 863 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கிறது. அங்கு பல வகையான பண்ணைகள் இருப்பதால், வேளாண் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் திறமையான ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். இந்தக் கட்டமைப்புகளையும், மனிதவளத்தையும் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியை மிகச்சிறந்த வேளாண் கல்வி நிலையமாகவும், ஆராய்ச்சி மையமாகவும் மாற்ற முடியும். ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில் இந்த இலக்குகளை எட்டிப் பிடிப்பதும், சாதிப்பதும் சாத்தியமானது அல்ல.

எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை அரசு வேளாண் கல்லூரியாக மாற்ற வேண்டும். அதை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் அக்கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், ஆராய்ச்சி வாய்ப்புகளை பரவலாக்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு: மாவட்ட செயலாளர் மீதான புகார்களை விசாரிக்க முடிவு

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 45 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை: கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால் நடவடிக்கை

தமிழக பட்ஜெட் மீதான விவாதம்: பேரவையில் இன்று தொடங்குகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்