

கோவிட்-19 வைரஸ் (கரோனா) பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 45,180 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 2,181 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
உலகையே அச்சுறுத்தி வரும்கோவிட் - 19 வைரஸ், சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தீவிரத்தால் 1,600-க்கும் அதிக மானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கோவிட் - 19 வைரஸ் பரவி இருப்பதால் மத்திய,மாநில அரசுங்கள் விமான நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. தமிழகம்உட்பட நாடுமுழுவதும் உள்ளஅனைத்து விமான நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர் வைரஸ் பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதன்படி தமிழகம் வந்த 45,180 பேருக்கு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 2,181 பேர்28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 10 சீனர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 43 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்றுதமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் பரிசோதனை
இதனிடையே ஜனவரி 17-ம்தேதிக்குப் பிறகு சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டெல்லியில் இருந்துசென்றவர்கள், திரும்பி வந்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டது. அவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரிசேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு பாதிப்பு அறிகுறி இருப்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.