

அதிமுகவில் மாவட்ட வாரியாக நடைபெற்று வந்த நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றது. மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கட்சி வளர்ச்சிப் பணிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்தொடர்பாக அதிமுக மாவட்டநிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வந்தனர். கடந்த 10-ம் தேதிதொடங்கியது. 11, 15-ம் தேதிகளிலும் ஆலோசனைக் கூட்டம்தொடர்ந்தது. இந்நிலையில், இறுதியாக 12 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலையில் நடந்த கூட்டத்தில் கோவை மாநகர், புறநகர்,அரியலூர், தருமபுரி, திருப்பூர் மாநகர், புறநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி மற்றும் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிற்பகல் 2.25 மணி வரை கூட்டம் நடைபெற்றது. அதன்பின், மாலை 4.30 மணிக்கு சேலம் மாநகர், புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, ஈரோடு மாநகர் ஆகிய மாவட்டங்களுக்கான கூட்டம் நடந்தது.
முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமையகத்துக்கு வந்தமுதல்வர் பழனிசாமியை அரசுகொறடா ராஜேந்திரன், கோவைமாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்துகொடுத்து வரவேற்றனர். முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இனிப்பு வழங்கினர்.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘மாவட்ட செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தினர். மாவட்டச் செயலாளர்கள் மீது சிலர் எழுப்பிய புகார்கள் குறித்து பேசிய ஒருங்கிணைப்பாளர்கள், ‘தற்போதைக்கு தேர்தல் பணிகளை கவனியுங்கள். புகார்கள் குறித்துவிசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தனர்’’ என்றனர்.