கரோனா வைரஸ்: விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை; சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் ஹீபெய் மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் இருந்து பரவியதாக அறியப்படும் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் முக்கியப் பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வைரஸ் தொற்று, உயிரைப் பறிக்கின்ற அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதால் அந்நாட்டு மக்கள் மட்டுமன்றி பிற நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜன.29) தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்த வைரஸின் அறிகுறிகள், எப்படிப் பரவும் என்பது குறித்து சுகாதாரத் துறை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 5 சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளனர். அங்கு வரும் 'தெர்மல் ஸ்கேனர் யூனிட்' இருக்கிறது. அதன் மூலம் ஒருவர் அதில் நின்றாலே, அவருடைய உடலின் வெப்பநிலையை அறிய முடியும்.

யாருக்காவது இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறது எனக் கண்டறியப்பட்டால் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிவிக்கப்படும். விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள். அங்கு, இதற்கென தனி வார்டு தயாராக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நோயாளி வந்தால் எப்படி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளோம்.

விமான நிலையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் இதே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகள் தாங்களாகவே தனக்குள்ள அறிகுறிகளை முன்வந்து சொல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இதுவரை 68 பேருக்கு சில அறிகுறிகள் உள்ளன. இவர்களில் 10 பேர் சீனர்கள். அவர்களது வீட்டில் இருந்தே கண்காணித்து வருகிறோம்.

மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அறிகுறிகள் இருப்பவர்களின் ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள என்.ஐ.வி.க்கு அனுப்பித்தான் இப்போதைக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முடியும்.

மக்களுக்கான அறிவுறுத்தல்கள்

கைகளை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

இருமும் போதோ தும்மல் வரும் போதோ தனியாகச் சென்று வாயை கைக்குட்டை மூலமாகவோ, வேறு ஏதேனும் கொண்டோ மூட வேண்டும். பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும்.

அசைவப் பொருட்களை நன்றாகச் சமைத்து உண்ண வேண்டும்"

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

19 mins ago

கருத்துப் பேழை

27 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

39 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்