எம்ஃபில், பிஎச்டி முடித்தவர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊக்க ஊதியம் வழங்கவில்லை: யுஜிசி உத்தரவை அரசு மீறுவதாக கல்லூரி பேராசிரியர்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சி.பிரதாப்

சென்னை

யுஜிசி உத்தரவிட்டும் எம்ஃபில், பிஎச்டி முடித்தவர்களுக்கு தமிழக அரசு ஊக்க ஊதியம் வழங்காமல் தாமதம் செய்வதாக அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் 14 கல்வியியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 113 அரசு மற்றும் 161 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக 2,200 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கிடையே, பணியில் இருக்கும் பேராசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை உயர்த்திக் கொள்ள எம்ஃபில், பிஎச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வர். அவ்வாறு எம்ஃபில், பிஎச்டி முடித்த பேராசிரியர்களுக்கு மாநில அரசுசார்பில் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிய முதுநிலை பட்டம் பெற்று ‘நெட்’ அல்லது ‘செட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், இல்லையெனில், பிஎச்டி முடித்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதியில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2016-ம் ஆண்டு மாற்றம் கொண்டுவந்தது.

மேலும், கல்வி தகுதியாகவே பிஎச்டி இருப்பதால் அதற்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டாம் என்று யுஜிசி தெரிவித்தது. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்கக் கோரி பேராசிரியர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் யுஜிசிக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன, அதன்பலனாக ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க யுஜிசி உத்தரவிட்டது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எம்ஃபில், பிஎச்டி முடித்த பேராசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை. அதேநேரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மாறுதலாகி வந்த பேராசிரியர்களுக்கு மட்டும் ஊக்க ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ‘‘ஏற்கெனவே அதிகமான பேராசிரியர் காலிப் பணியிடங்கள் காரணமாக கூடுதல் பணிச்சுமையில் தவித்து வருகிறோம். பதவி உயர்வு குளறுபடிகளால் கல்லூரி முதல்வர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் முறையான தகுதி இருந்தும் ஊக்க ஊதியம் கிடைக்காதது பெரும் மனஉளைச்சலாக உள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறையில் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலனில்லை.

தற்போது பணிபுரியும் பேராசிரியர்களில் 60 சதவீதம் பேர் முந்தைய கல்வித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களாவர். பணியில் சேர்ந்தபோதில் இருந்து வழங்கப்பட்ட சலுகைகளை, திடீரென விதிகளை மாற்றி, தரமறுப்பது ஏற்புடையதல்ல.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மாறுதலாகி வந்த பேராசிரியர்களுக்கு மட்டும் ஊக்க ஊதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே பணி செய்யும் ஆசிரியர்களிடம் பின்பற்றப்படும் இந்த பாரபட்சம் நியாயமாகாது. இதனால் ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான ஆர்வம் ஆசிரியர்களிடம் குறைந்துவிடும். இந்த விவகாரத்தில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு யுஜிசி மறுஉத்தரவு வழங்கியது.

அதையேற்று பல்வேறு மாநிலங்களில் பேராசிரியர்களுக்கு மீண்டும் ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. அதே போல், நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை வழங்க தமிழக அரசும் முன்வர வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்ற பின்னர் உயர்கல்வித் துறைக்கான செலவினம் அதிகரித்துள்ளது. போதுமான நிதி இல்லாததால் பேராசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் உள்ளிட்ட இதர பலன்கள் வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. விரைவில் அவை சரிசெய்யப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

வாழ்வியல்

13 mins ago

தமிழகம்

29 mins ago

கருத்துப் பேழை

51 mins ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

59 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்