‘நீட்’ விலக்கு; சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: கி.வீரமணி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழக அரசு வரும் சட்டப்பேரவைத் தொடரில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கடமையைச் செய்யாத பட்சத்தில் சமூகநீதியாளர்கள் ஒன்று திரட்டப்பட்டு , வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' ‘நீட்’ தேர்வால் என்ன நடக்கும் - சமூகநீதி குழிவெட்டிப் புதைக்கப்படும் என்றோம். இப்பொழுது அதுதான் நடந்திருக்கிறது. லட்சம் லட்சமாய் ரூபாய் செலவு செய்து ‘நீட்’ கோச்சிங்கில் யாரெல்லாம் சேரவில்லையோ அவர்களில் ஒருவர் கூட தருமபுரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரவில்லை.

மீதமிருக்கிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிலைமை என்ன? ஒரு கல்லூரியில் 3 பேர் வீதம் 16 கல்லூரிகளிலும் சேர்த்து வெறும் 48 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ பயிற்சி வகுப்பு செல்லாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கின்றார்கள். இவர்களில் பலரின் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்தவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அனைவரும் தனியார் பள்ளிகளிலும், மருத்துவப் படிப்பிற்காக சிறப்பு வகுப்புகளிலும் சேர்ந்து படித்துள்ளனர்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3081 இடங்கள் உள்ளன. 48/3081 = 1.55 விழுக்காடு. இதுதான் நமக்குக் கிடைத்த விழுக்காடு. இந்த 48 பேர் போக மீதமுள்ள 3033 பேரும் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்புக்குச் சென்றவர்கள். இப்போது புரிகிறதா தகுதி எது? தரம் எது என்பது?

2016-2017 இல் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு பல லட்சங்கள் செலவு செய்து நீட் பயிற்சி வகுப்புகளுக்குப் போய், ‘நீட்’தேர்வை எழுதி அதில் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போய், 2017-2018-ல் மறுபடியும் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்பிற்குப் போய், மறுபடி இரண்டாம் முறையாக ‘நீட்’தேர்வு எழுதி, தேர்வாகி 2018-ல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 2007 பேர்.

இவர்கள் 2 ஆண்டு ‘நீட்’ தேர்வுக்காக பிரத்யேகமாக ‘நீட்’ பயிற்சி மையங்களுக்குப் பயிற்சிக் கட்டணம் கொடுத்துள்ளனர். அதாவது பிரபல பயிற்சி மையங்களுக்குத் தலா ஒரு நபர் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

2016-2017 இல் ‘நீட்’ இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் வெறும் 62. ‘நீட்’ வந்த பிறகு பெற்ற இடங்கள் 1220. அதாவது கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.

‘நீட்’ பின் திரையில் இருக்கும் சதி இன்னமுமா புரியவில்லை? பணம் உள்ளவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியா?

தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் ‘‘கமுக்கமாக’’ நிராகரிக்கப்பட்டதே ஒழுங்கு முறையற்றது! தமிழ்நாடு அரசும் ஏன் மறைத்தது என்பது போன்ற கேள்விகள் சமூக நீதியாளர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. நடக்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும். அம்மா ஆட்சி என்று சொல்பவர்கள், சமூகநீதி காத்த வீராங்கனையாக அவர் செயல்பட்டதை மறந்தது ஏன்?

விரைவில் இதற்கொரு தீர்வு காணப்படவேண்டும். சமூக நீதியாளர்களை ஒன்று திரட்டி, வீதிக்கு வந்து போராட திராவிடர் கழகம் தயங்காது'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

க்ரைம்

26 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்