அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாடு: இளைஞர்கள், மாணவர்களுக்கு வைகோ அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை

அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாட்டுக்கு தமிழ் மக்கள் வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (செப்.12) வெளியிட்ட அறிக்கையில், "அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாடு, வழக்கம்போல் மிக எழுச்சியாக சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப்டம்பர் 15 அன்று நடைபெறுகிறது. தமிழக அரசியலிலும், இந்திய அரசியல் அரங்கிலும் மிக முக்கியமான காலகட்டத்தில், அண்ணா ஏற்றி வைத்த அணையாச் சுடர், மாநில சுயாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு; ஒரே தேர்தல்; ஒரே குடும்ப அட்டை; ஒரே கல்வி; ஒரே சுகாதாரக் கொள்கை; ஒரே வரிவிதிப்பு என்று அனைத்தையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, எதேச்சதிகார ஆட்சி நடத்த மதவாத சனாதன சக்திகள் ஆட்சி அதிகாரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, கூட்டாட்சிக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் பாஜக அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.

வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் இந்தியா ஒரே நாடாக இருந்தது இல்லை என்பதும், ஆங்கிலேயர் ஆட்சிதான் பீரங்கிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் பயன்படுத்தி இந்தியா என்ற வரைபடத்தை உருவாக்கியது என்பதும்தான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேருண்மையாகும். இதைத்தான் அண்ணா, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களால் இணைக்கப்பட்ட துணைக் கண்டம் என்று தெளிவுபடக் கூறினார்.

தேசிய இனங்களின் அடையாளங்களையும், இன, மொழி, பண்பாட்டு உரிமைகளையும் பாதுகாப்பதின் மூலம்தான் வேற்றுமையில் ஒற்றுமை நிலவ முடியும். தேசிய ஒருமைப்பாடு என்பது நிலைக்கும் என்று அண்ணா பிரகடனப்படுத்தினார்.

அண்ணா: கோப்புப்படம்

இந்தியாவை ஒற்றை ஆட்சிக்குத் தள்ளும் எதேச்சதிகாரத்தை எதிர்க்கும் ஈட்டி முனையாக திமுக திகழும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா சுட்டிக்காட்டியதைப் போல, மதிமுக அண்ணா காட்டிய லட்சியப் பாதையில் பயணிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்ட காரணத்தினாலேயே பல்வேறு தேசிய இனங்களின் கலாச்சார அடையாளத்தை அழித்து, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறித்து அடக்கி ஆள நினைக்கின்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க இந்திய அரசியலில் மாநிலக் கட்சிகள் பலம்பெற வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பலிகொடுத்து, நாசப்படுத்தி வரும் அதிமுக அரசைத் தூக்கி எறிய வேண்டும்.

அந்தக் கடமையை நிறைவேற்ற களம் அமைக்க வேண்டியது அண்ணா வழியில் நடைபோடும் மதிமுகவின் அரசியல் பணியாகும். அதற்குக் கட்டியம் கூறத்தக்க வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் எனது இனிய நண்பர் பரூக் அப்துல்லா பங்கேற்கிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவும், திரிணமூல் காங்கிரஸின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதியும் சிறப்புரை ஆற்றுகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்டின் நண்பகல் அமர்வில் நிறைவுரை ஆற்றுகிறார்.

மதிமுக வரலாற்றில், மற்றொரு மைல் கல்லாக அமையப்போகிற இந்த மாநாட்டுக்குத் தொண்டர்கள் அலை அலையாக அணிதிரண்டு வர வேண்டும். தமிழ் மக்கள் வருங்காலத் தமிழகத்தை வார்ப்பிக்கப் போகிற இளைஞர்கள், மாணவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

க்ரைம்

17 mins ago

சுற்றுச்சூழல்

53 mins ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்