தமிழகத்தின் அடையாளமான தம்மம்பட்டி மரச்சிற்பம்!- புவிசார் குறியீடு கிடைக்குமா?

By செய்திப்பிரிவு

கி.பார்த்திபன்

வீடு, வணிக வளாகங்களின் அழகை மெருகூட்டுவதில் சிற்பங்களுக்கு இணை ஏதுமில்லை. குறிப்பாக, ஒரு அறையை அல்லது அரங்கை அழகுபடுத்துவதில் மரச் சிற்பங்களுக்கு முக்கிய இடமுண்டு. இதனால், கடவுள் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான மரச் சிற்பங்களுக்கு கலை பிரியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் அதிக அளவில் மரச் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்பாக, தம்மம்பட்டியில் உருவாக்கப்படும் மரச்சிற்பங்கள் நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும் செய்யப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதுடன், ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்கிறார் பல தலைமுறைகளாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் தம்மம்பட்டி சி.சீனிவாசன். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

பூர்வீகம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி. தாத்தா ராமசாமி காலத்தில் தம்மம்பட்டிக்கு வந்து, மரச் சிற்ப வேலையில் ஈடுபட்டோம். 1952-ல் தம்மம்பட்டி உக்ர கதலீ நரசிம்ம ஸ்வாமி கோயில் தேரை உருவாக்கும் பணியில் தாத்தா ராமசாமி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். தாத்தா காலத்திலேயே எனது தந்தையும், நானும் மரச் சிற்பத் தொழிலுக்கு வந்துவிட்டோம்.
தம்மம்பட்டியில் மட்டும் 120 மரச் சிற்பக் கலைஞர்கள் உள்ளனர். சுவாமி சிலை, தலைவர்களின் சிலை என பல்வேறு வடிவங்களிலான சிற்பங்களை வடிவமைத்து தருகிறோம். சிற்ப வடிவமைப்பு, வளைவுகள் உள்ளிட்டவை உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, தற்போது டிஜிட்டல் முறையில் மரச் சிற்பங்களுக்குத் தேவையான படங்கள் வரையப்படுகின்றன. பின்னர், அதை அடிப்படையாகக் கொண்டு மரச் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஒன்றரை அடி முதல் 10 அடி உயரம் வரையில் உருவாக்கப்படும் மரச் சிற்பங்கள், அவற்றின் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் சிற்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்க நாங்கள் வாகை மரங்களை பயன்படுத்துகிறோம். இவை தஞ்சை, கும்பகோணம் என காவிரிக் கரையோரப் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. அனைத்து தட்பவெப்ப நிலைக்கும் வாகை மரங்கள் ஏற்றவை. சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங்கள், சிற்பங்கள் செய்ய உகந்தவை. அதேசமயம், தேக்கு மரத்திலும் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

அத்திவரதருக்கு மவுசு அதிகம்!

தற்போது, அத்திவரதர் சிற்பம் செய்ய நிறைய ஆர்டர்கள் வருகின்றன. அத்தி மரத்தில் மட்டுமே அத்திவரதர் சிற்பங்களை செய்துதருமாறு கேட்கின்றனர். 1980-ம் ஆண்டுகளில் தம்மம்பட்டியில் தயார் செய்யப்பட்ட மரச் சிற்பங்கள் மும்பை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது, அமெரிக்காவுக்கும் அதிக அளவில் மரச் சிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எனது தந்தை ஆர்.சந்திரனின் மரச் சிற்பக் கலையைப் பாராட்டி, மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன. இதேபோல, தம்மம்பட்டியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ளனர். சர்வதேச தரத்தில் மரச் சிற்பங்கள் தயார் செய்வதே, தம்மம்பட்டி மரச் சிற்பங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க காரணமாகும்.
2006-ல் இஸ்கான் அமைப்பு சார்பில், ரஷ்யாவில் மரத்தினால் இந்திய கிராம மாதிரி சிற்பங்களை வடிவமைக்கச் சென்றோம். இந்தியாவில் இருந்து 8 பேர் சென்ற நிலையில், தென்னிந்தியாவில் இருந்து சென்றது நான்மட்டும்தான். ஏறத்தாழ 3 மாதங்கள் அங்கு தங்கி, மரச் சிற்பங்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தம்மம்பட்டியில் உள்ள ஒவ்வொரு சிற்பக் கலைஞரும், தனித்தன்மை கொண்டவர்கள். நான் பூஜை அறைகளை வடிவமைத்துக் கொடுக்கிறேன். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் மதிப்பு வரையிலான பூஜை அறைகளை வடிவமைத்துக் கொடுக்கிறேன். அதேசமயம், எனது சிற்பக் கலைக் கூடத்தில் அனைத்து வகையான சிற்பங்களும் உருவாக்கபடுகின்றன. ரிஷிகேஷில் உள்ள சிவானந்தா மடத்தின் பிரதான கதவை எனது தந்தை வடிவமைத்துக் கொடுத்தார். அதில், அனைத்து மத சின்னங்களும் இடம் பெற்றுள்ளன.

21 வகை பூச்சி இனங்கள்...

இதேபோல, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு, 3 டன் எடையிலான மரத்தில், உலகில் உள்ள 21 வகையான பூச்சி இனங்களை சிற்பமாக வடிவமைத்துக் கொடுத்தேன். ஏறத்தாழ ஓராண்டுக்கு அந்தப் பணி நடைபெற்றது.வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆர்டர்களுக்கும், சிலை வடிவமைத்துக் கொடுக்கிறோம். தமிழர்களின் சிற்பக் கலையும், வட மாநில சிற்பக் கலையும் முற்றிலுமாக மாறுபட்டது. எனினும், உலகிலேயே சிற்பக் கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்தான். சோழர்கள், பல்லவர்கள்கால கல்வெட்டுகளில் உள்ள சிற்பங்களையே பல ஆண்டுகளுக்கு மரச் சிற்பங்களாக வடிவமைக்கலாம். அந்த அளவுக்கு நுணுக்கமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மரங்கள் இருந்தால்தான் சிற்பக் கலைஞர்களுக்கு வேலை இருக்கும். எனவே, மரம் வளர்ப்பு தொடர்பாக வனத் துறையினருடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எந்த மாதிரியான மரங்கள் தேவை என்பது தொடர்பாக, கோவை வன ஆராய்ச்சி மையத்தில் நடந்த கூட்டத்தில் பேசி, அறிக்கையும் வழங்கினேன். இதனால், மரம் வளர்ப்பு திட்ட அறிவிப்பின்போது, நாங்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.தம்மம்பட்டியில் இரண்டரை ஏக்கர் பரப்பில் சிற்பக் கலைக் கூடம் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சிலை வடிவமைப்புக்குத் தேவையான பணிகளை, குறைந்த கட்டணத்தில் அங்கு மேற்கொள்ள முடியும்.

சிற்பக் கலையில் தம்மம்பட்டி சிறந்து விளங்குவதால், கடந்த 2015-2016-ல் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. எனினும், இக்கலை தோன்றிய காலம் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடம் இல்லாததால், புவிசார் குறியீடு கிடைக்கவில்லை. எங்களிடம் உள்ள ஆவணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், தம்மம்பட்டி ஆகிய மூன்று ஊர்களையும் இணைத்து, ஏதாவது ஓர்டத்தில் புவிசார் குறியீடு பெற முயற்சிப்பதாக, இப்பணியை மேற்கொள்ளும் துறையினர் தெரிவித்தனர்.

புவிசார் குறியீடு கிடைத்தால், நாங்கள் மேற்கொள்ளும் வடிவமைப்பை பிறர் பயன்படுத்த முடியாது. எங்களுக்கு அங்கீகாரமும் கிடைக்கும். எனவே, புவிசார் குறியீடு கிடைக்க அரசு உதவ வேண்டும். கள்ளக்குறிச்சி, அரும்பாவூரில் உள்ள சிற்பக் கலைஞர்கள், தம்மம்பட்டியில் உள்ள கலைஞர்களின் வழி வந்தவர்கள்தான். இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலித் தீவில் தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை. தமிழர்களைப்போலவே, அவர்களும் மரச் சிற்பங்களை சிறப்பாக வடிவமைப்பர். அவர்கள் தமிழ் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்