பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

பட்ஜெட்டில் மக்கள் எதிர்ப்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த குறையுமின்றி நிறைவேற்றும் வகையில் அவற்றை தயாரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை போதிய நிதி இல்லாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக கடந்த 12 ஆம் தேதி ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து பேசிய அன்புமணி, தருமபுரி & மொரப்பூர் ரயில்வேப் பாதை திட்டம் உட்பட 19 ரயில்வேத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்காகத் தேவைப்படும் ரூ.9215 கோடி நிதியில் கணிசமான தொகையை வரும் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். தமிழகத்தின் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் ரயில்வே நிதிநிலைஅறிக்கை அமைய வேண்டும்.

பொது நிதிநிலை அறிக்கையைப் பொருத்தவரை அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? என்பது தான். வருமான வரி செலுத்துவதற்கான வருவாய் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டில் இந்த வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டது. நடப்பாண்டிலாவது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பிரதமரும், நிதி அமைச்சரும் முன்வர வேண்டும். அதேபோல், சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் மீதான வரிவிலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படுகிறது. இதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலும் பெருமளவு வெட்டப்பட்டது. குறிப்பாக உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.77,307 கோடியில் சுமார் ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.30,645 கோடியில் சுமார் ரூ.7,000 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.80,043 கோடியில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடியும் வெட்டப்பட்டது. இதனால் இத்துறைகளின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலையை மாற்றும் வகையில், சமூகத் துறைகளுக்கு வரும் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நாடு முழுமைக்குமான திட்டம் என்ற நிலையிலிருந்து 200 மாவட்டங்களுக்கு மட்டுமான திட்டமாக மாற்றப்பட்டு விட்டது என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. இதை மாற்றும் வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

க்ரைம்

1 min ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்