Published : 29 Apr 2024 09:58 AM
Last Updated : 29 Apr 2024 09:58 AM

சொத்து மறுபங்கீடு முதல் ராகுலின் எக்ஸ்ரே கருத்து வரை: பிரதமர் மோடி பேட்டி

மக்களவைத் தேர்தல் இரண்டு கட்ட வாக்களிப்பு முடிவுற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸின் சொத்து மறுபங்கீடு வாக்குறுதி முதல் ராகுலின் எக்ஸ்ரே விமர்சனம் வரை பல்வேறு சர்ச்சைகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி ஊடகங்கள் பேசாததால்.. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் என்பது வெறும் விளம்பரங்கள் அல்ல. அவற்றை வாசித்து ஆராய்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டியது ஊடகங்களின் கடமை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்தவுடனேயே இதைப் பற்றி நான் முதல் நாளே கருத்து தெரிவித்தேன். அதில் முஸ்லிம் லீக் அடையாளம் இருப்பதாக உணர்ந்தேன். ஊடகங்கள் காங்கிரஸ் அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி கொள்ளும் என நினைத்தேன். ஆனால் அவை காங்கிரஸ் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தன. அதன்பின்னரே நான் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் எதிர்மறையான விஷயங்களை யாரேனும் வெளிக் கொண்டு வருவார்கள் என நான் 10 நாட்கள் வரை காத்திருந்தேன். அது நடக்காத நிலையில் நானே உண்மையைச் சொல்ல நிர்பந்திக்கப்பட்டேன்.

பாஜகவின் நிலைப்பாடு.. சொத்துகள் மறுபங்கீடு விவகாரத்தில் பாஜக மிகவும் தெளிவாக இருக்கிறது. அவர்கள் சொன்னதை நாங்கள் செய்வோம் என்று எந்த முகாந்தரத்தில் பேசுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையோடு மக்கள் முன்னால் நிற்கிறோம். ஆகையால் இது போன்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தாதீர்கள்.

ராகுலின் எக்ஸ்ரே கருத்து.. காங்கிரஸ் நாட்டை எக்ஸ்ரே கொண்டு பார்க்கும் என்று ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தங்கத்தை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று ஆராயப் போகிறோம் என்பதே அவர்கள் எக்ஸ்ரே செய்யப்போகிறோம் எனச் சொல்வதற்கு அர்த்தம். தாய்மார்கள் பருப்பு டப்பாக்களில் வைத்திருக்க்கும் சேமிப்புகளைக் கூட ஆராயப் போகிறார்கள். அதைப் பறித்துக் கொள்ளப் போகிறார்கள். பெண்களின் நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றே அதற்கு அர்த்தம். நிலங்கள் பற்றிய ஆவணங்கள் ஆராயப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். அவை மறுபங்கீடு செய்யப்படும் என்று அர்த்தம். இதுபோன்ற மாவோயிஸ்டு சிந்தனை உலகுக்கு ஒருபோதும் உதவியதில்லை. இது முழுக்க முழுக்க அர்பன் நக்சல் சிந்தனையாகும்.

4 கோடி வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம்.. பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்காக இதுவரை செய்ததைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறது. ஏழை மக்களுக்கு நாங்கள் 4 கோடி வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் கட்சியினர் கட்டப்படாத வீடுகள் பற்றிய தகவலை அளிக்கும்படி நான் கூறி வருகிறேன். மூன்றாவது முறையாக நான் ஆட்சி அமைத்த பின்னர் அவை கட்டிமுடிக்கப்படும். அதுவே எங்களின் வாக்குறுதி.

52 கோடி வங்கிக் கணக்குகள்.. கடந்த 10 ஆண்டுகளாக எனது அரசு 52 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளது. இது உலகம் முழுவதும் ஒரு ஆண்டில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விட அதிகமாகும். ஜன் தன், ஆதார், மொபைல் மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் நலத்திட்ட நிதி சென்று சேர்வதை ஊக்குவித்துள்ளேன். டிபிடி மூலம் ரூ.36 லட்சம் கோடி நிதி மக்களுக்குச் சென்றுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x