கலசலிங்கம் பல்கலை.- பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்: கிராமப்புற மாணவர்களும் ஐஏஎஸ் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி பெற வாய்ப்பு

By இ.மணிகண்டன்

மாநில, மத்திய தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க, கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் அரசின் பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பட்டப் படிப்பு முடித்த கிராமப்புற மாணவர்கள், அடுத்தபடியாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட மாநில தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும், மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், சரியான வழிகாட்டுதல்கள், முறையான பயிற்சி இன்மை ஆகிய காரணங்களால், பலர் தேர்ச்சி பெறுவதில்லை.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்குச் சென்று, போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள், உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் சில தன்னார்வ அமைப்புகள் மூலம் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில்கின்றனர். குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர் களுக்கு முக்கியப் பயிற்சி மையமாக விளங்குவது நூலகங்கள் எனலாம்.

விருதுநகர் மாவட்டப் பொது நூலகத் துறை சார்பில் ரூ.1.7 கோடியில் அரசு ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப் பட்டது. இந்தப் பயிற்சி மையத்தை, அரசு முதன்மைச் செயலர் இறையன்பு தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட பொது நூலகத் துறையும், கலச லிங்கம் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம், நூலகங்களில் வாசகர்களாக உள்ள இளைஞர்கள், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாகப் பயிற்சி பெறலாம்.

இந்தப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே 420 பல்கலைக்கழகங்களுடன் இணைவு பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால், 420 பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் சிறப்புப் பயிற்சிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த மாணவர்களும் பயிற்சி பெறலாம். இதுகுறித்து நூலகத் துறை அலுவலர்கள் கூறியதாவது:

போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சி, கருத்தரங்குகளில் இலவசமாகப் பங்கேற்பது மட்டுமின்றி, நூலக உறுப் பினர் அட்டை வைத்துள்ள அனைத்து இளைஞர்களும் இப்பயிற்சி மையத்தில் உள்ள நவீன கணினி வசதி மூலம் இ-புக், இ-லேர்னிங் மூலமும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறலாம். மேலும், எந்த மாதிரியான நூல்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது பற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.

தனியார் பல்கலைக்கழகத்தோடு பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வாசகர்களுக்கு வழிவகுத்துள்ளது நாட்டிலேயே இதுவே முதல் முறை. இதன்மூலம், எந்த அரிய புத்தகத்தையும் நிமிடத்தில் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு இனி கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும். இதனால், சரியான வழிகாட்டுதல்களோடு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்களும் இனி சுலபமாக வெற்றி பெற முடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்