நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்தது கூட்டாட்சிக்கு எதிரானது: நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு

By செய்திப்பிரிவு

நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்தது கூட்டாட்சிக்கு எதிரானது என, மாநிலங்களவை திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மருத்துவப் மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

2017- 18 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன் இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைகளுக்கு  உத்தரவிடக் கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது,, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் தெரிவித்ததாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவை திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (திங்கள்கிழமை) இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியதாவது:

"மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. நீட் தேர்வு கேள்வித்தாளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்பட்டதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளில் படித்த மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏழை மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதனால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக் கோரி எதிர்க்கட்சியான திமுகவின் ஆதரவுடன் தமிழக அரசு இரு மசோதாக்களை நிறைவேற்றியது.

ஆனால், இந்த இரு மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கூட்டாட்சிக்கு எதிரானது".

இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

இதையடுத்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

17 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்