இதென்ன விளையாட்டா.. மாதாமாதம் முதலமைச்சரை மாற்ற முடியுமா? - அதிமுக எம்எல்ஏக்களின் மாறுபட்ட கருத்துகளால் தொண்டர்கள் குழப்பம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிமுக அரசியலில் நாளொரு பரபரப்பு, பொழுதொரு அறிவிப்புமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சென்னையில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் 112 எம்எல்ஏக்கள் ஆஜரானதாக ஆளும் தரப்பு தெரிவித்தாலும், 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆதரவு அணியிலேயே ‘அரைமனது’ அணி ஒன்று உருவாகியுள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத எம்எல்ஏக்கள் சிலரின் மனநிலையை ‘தி இந்து’ நிருபர்கள் குழு அறிய முயன்றது.

சத்யா (திநகர் எம்எல்ஏ): நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என, காரணங்கள் கூறி இருவர் முதல்வரிடம் அனுமதி பெற்றிருந்தனர். 98 சதவீதம் எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறாம். தற்போது அங்கு உள்ள எம்எல்ஏக்கள் எத்தனை நாட்கள் இப்படி இருக்க முடியும். அவர்கள் தொகுதிக்கு செல்ல வேண்டுமே. எனவே அவர்கள் அனைவரும் கட்டாயம் வருவார்கள். ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர் எம்எல்ஏ): எங்கள் அணியைச் சேர்ந்த 21 பேருக்கும் அழைப்பு அனுப்பாமல் கூட்டத்தை நடத்தி 4 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். பாஜக உதவியுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்பார்களாம். எங்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவதாக மிரட்டுகிறார்கள். முதலில் பழனிசாமி, ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி, வீரமணி வீடுகளில் நடத்திவிட்டு, எங்கள் வீடுகளில் ரெய்டு நடத்த வரட்டும்.

எங்கள் அணியினரையும் திமுகவில் 25 பேரையும் நீக்கிவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க பழனிச்சாமி திட்டம் போடுகிறார். இவர்களைப் பார்த்துதான் மக்கள் ஓட்டுப் போடுவார்களா? தனபாலைப் பார்த்தால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்களா என்ன?

சு.ரவி (அரக்கோணம் எம்எல்ஏ): மக்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் தினகரன் அணியினர் செயல்படுகின்றனர். கட்சித் தலைமைக்கு வருபவர்கள் ஊழல் புகார் இல்லாமல் இருக்க வேண்டும். தூய்மையான தலைமையை இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக தலைமைக்கு வரும்போது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஊழல் புகார் இல்லாமல் இருந்தனர். அதேபோல், இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு இருக்கிறது. சசிகலா குற்றவாளி என்று சிறையில் இருக்கிறார். இவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தோப்பு என்.டி. வெங்கடாசலம் (பெருந்துறை எம்எல்ஏ):இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். எனவே, இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். இந்த கூட்டத்திற்கு வராத அதிருப்தி எம்எல்ஏக்களுடன் (தினகரன் ஆதரவு ) பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டால், அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

வி.சி.ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம் எம்எல்ஏ): முதல்வரையும், அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என தினகரன் தரப்பினர் கேட்கின்றனர்.

இது என்ன விளையாட்டா? மாதந்தோறும் முதல்வரையும், நிர்வாகிகளையும் மாற்றிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர் உட்பட நாங்கள் அனைவரும் கட்சிக்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, உழைத்து பதவிக்கு வந்துள்ளோம். அந்த கும்பல் அவர்களையும் புறந்தள்ளாது என்பது என்ன நிச்சயம்? தியாகத்துக்கும், துரோகத்துக்கும் போட்டி என்கிறார்கள். அவர்கள் என்ன தியாகம் செய்துவிட்டனர். கட்சி வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளனர்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய இந்த அரசை அகற்றுவதுதான் தியாகமா? அதிகாரம், ஆணவத்துடன் அவர்கள் செயல்படுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளோம். எந்த சூழ்நிலையையும் சந்திப்போம்.

கனகராஜ் (சூலூர் எம்எல்ஏ): கட்சியில் இருந்து இவர்களை நீக்கிவிட்டதாக அவர்களும், அவர்களை நீக்கிவிட்டதாக இவர்களும் கூறுகின்றனர். கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை. யாரை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புரியவில்லை. தற்போதுள்ள நிலைமையில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

கரைப்புதூர் நடராஜன் (பல்லடம் எம்எல்ஏ): உறவினர் இல்லத் திருமணத்துக்குச் சென்றதால் சென்னையில் நடைபெற்ற கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை.

பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ): தங்களின் சுய தேவைகளுக்காக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். எனக்கும் சில எம்எல்ஏக்களுக்கும் இந்தக் கூட்டம் குறித்து தகவலே சொல்லப்படவில்லை. 32-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

முருகன் (அரூர் எம்எல்ஏ): இந்த கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை. மக்களையும், நடுநிலையாளர்களையும் குழப்பும் வேலை இது. எங்கிருந்தோ வரும் உத்தரவுக்காக செயல்படுகின்றனர். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சுயநலத்துக்காக கட்சியை அழிவு நோக்கி அழைத்துச் செல்லும் செயல் இது.

ஏ.கே. போஸ் (திருப்பரங்குன்றம் எம்எல்ஏ): நான் அடிக்கடி நிறம் மாறுவதாக நினைக்க வேண்டாம். தற்போது முதலமைசச்சர் பழனிசாமிக்கு என்னுடைய ஆதரவு. கட்சி என்று வந்துவிட்டால் சசிகலாவுக்குதான் என் ஆதரவு. சசிகலாவை நீக்குவதாக தெரிவித்துள்ளனர். நீக்கும்போது, என் கருத்தை தெரிவிப்பேன்.

பரமசிவம் (வேடசந்தூர் எம்எல்ஏ) : கூட்டத்தில் நான் பங்கேற்றேன். அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவுகள் எடுத்துள்ளனர். ஒரு வாரத்துக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என தெரிகிறது. பெரும்பான்மையான ஆட்சியாகவே அதிமுக ஆட்சி தொடரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்