750 யூனிட் வரை மானியத்துடன் மின்சாரத்தை வழங்கிடுக: வாசன்

By செய்திப்பிரிவு

மக்களுக்கான சேவையில் மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி குறைந்தபட்சம் 750 யூனிட் வரை மானியத்துடன் மின்சாரத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு மாநில மக்களின் மின் தேவையையும், சிறு குறு மற்றும் பெரு நிறுவனங்களுக்கான மின் தேவையையும், பல்வேறு தொழிற்சாலைகளுக்கான மின் தேவையையும் முழுமையாகப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. தற்போது 2 மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களும் மின்சாரத்தை முழு நேரம் அவசியம் பயன்படுத்தக் கூடிய கட்டாயச் சூழலில் இருப்பதால் மக்களுக்கான சேவையில் மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி குறைந்தபட்சம் 750 யூனிட் வரை மானியத்துடன் மின்சாரத்தை வழங்க முன்வர வேண்டும்.

மேலும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு வீட்டிற்கு 12.5 யூனிட் வரை மானியம் வழங்கப்பட வேண்டும். மின்சக்தியை பூமிக்கு மேற்பகுதியில் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றின் மூலம் கொண்டுசெல்வதற்கு பதிலாக பூமிக்கடியில் கேபிள்கள் அமைத்தால் மின்திருட்டை தடுக்கவும், மின் கசிவு அடிக்கடி ஏற்படாமல் இருப்பதற்கும், மின்சார வாரியத்தின் செலவையும் குறைக்க முடியும்.

தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்வதற்கும், காற்றாலை மின்சாரத்தையும், சூரிய ஒளி மின்சாரத்தையும் அதிக அளவில் பயன்படுத்துவதற்காகவும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயம் நடைபெறும் பகுதியில் மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும், அப்பகுதி மக்களின் மின்தேவைக்கும் சூரிய ஒளி மின்சாரத்தையே அரசு முனைப்புடன் செயல்படுத்த முன்வர வேண்டும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை விநியோகப்படுத்தும் போது குறைபாடு நடைபெறாமல் இருப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மின்சாரம் வீணாகாமல் இருப்பதோடு, நஷ்டமும் ஏற்படாமல் மின்சாரத்தை சேமிப்பதற்கும், நிர்வாகத்தில் சீர்கேடு ஏற்படாமல் இருப்பதற்கும் வழி வகுக்கும்.

தற்போது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் நிலக்கரி கொள்முதல் விலை குறைந்து, ஒரு யூனிட் மின் உற்பத்திக்கான செலவு 6 முதல் 7 பைசா வரை குறைந்துள்ளது. இதனால் கிடைக்கும் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். வீடு, கடை, நிறுவனம், தொழிற்சாலை எதுவாக இருந்தாலும் மின்சாரத்தை எவ்வளவு யூனிட் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும். இல்லையென்றால் மின் கட்டணம் செலுத்துவதில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டு பெரும்பாலும் பாதிக்கப்படுவது மானியத்துடன் மின்சாரத்தை பயன்படுத்தும் சாதாரண பொது மக்கள் தான்.

மின் கட்டணம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டபிறகு மக்கள் தெரிவித்த கருத்துக்களை ஏற்று செயல்பட தமிழக அரசு முன்வர வேண்டுமே தவிர மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மின் இழப்பு சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாகவும், நம் நாட்டில் மின் இழப்பு சுமார் 26 சதவீதமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே நம் நாட்டில் மின் இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து எடுக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை. எனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மாநிலத்தின் மின் தேவையை முழுமையாக ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்வதற்காக தொடர் கண்காணிப்பு, தொடர் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக மின் திருட்டை முற்றிலுமாக ஒழிப்பதற்கும், மின் கசிவு ஏற்படாமல் இருப்பதற்கும், காற்றாலை, சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கும், மின்சாரத்தை சேமிப்பதற்கும், நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கும் அதிக கவனம் செலுத்தி தமிழகத்தில் ஏழை, எளிய மக்களும் மின் தேவையை முழுமையாகப் போதுமான அளவிற்கு பயன்படுத்தி பயன்பெற வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்