மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திமுக செயல்படும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

கடந்த முறை ஏமாந்துபோன மக்களின் எதிர்பார்ப்புகள் திமுக பக்கம் திரும்பியுள்ளதால் அதனை நிறைவேற்றும் வகையில் தங்களது செயல்பாடுகள் இருக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''திமுக செயல் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதன் தனிப்பட்ட எனக்கான வாழ்த்தாக கருதாமல் தமிழர்களின் பண்பாடாகவே கருதுகிறேன்.

அருகி வரும் பண்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் வெளிப்பட்ட வாழ்த்துகளுக்கு நெஞ்சார்த்த நன்றிகள். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நட்பும், நல்லுறவும் என்றென்றும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கவும், தமிழகத்தின் பொதுப் பிரச்சினைகளில் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றவும் இத்தகைய வாழ்த்துக்கள் வலிமை சேர்க்கும் என நம்புகிறேன்.

அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஊடகத் துறையினர், சமூகநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என நாட்டு நலனில் அக்கறை கொண்ட பலரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

கட்சித் தொண்டர்களின் சங்கிலித் தொடர் போன்ற வருகையும், வாழ்த்தொலியும் நெஞ்சத்தில் தேனாகப் பாய்கிறது. நாம் காண்கிற களங்களும், நாளை பொறப்போகிற வெற்றிகளுக்கும் இன்று கிடைக்கும் ஊக்கமிகு வாழ்த்தொலியாகவே உங்கள் அன்பை கருதுகிறேன்.

போர்க்களம் செல்லும் வீரர்களுக்கு அவர்களின் இல்லத்தாரும், ஊர்மக்களும், மாலையிட்டு, வெற்றித் திலகமிட்டு, பறைகொட்டி வாழ்த்துச் சொன்ன வரலாற்றை புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. கருணாநிதி எழுதிய ‘சங்கத் தமிழ்’ நூலில் இவற்றை அழகு மிகு சொற்களால் கவிதையாக வடித்திருக்கிறார்.

பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாற்றும் வகையில் காலில் விழுவதை தவிர்க்குமாறு நான் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் இன்று அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியும், முடக்கமும் தொடர்கிறது. இந்நிலையில் சென்ற முறை ஏமாந்துபோன தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நம் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கான பணிகளை நாம் சிரம் மேல் தாங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். வேண்டுகோள் விடுக்கிறார்கள். மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நமது செயல்பாடுகள் தொடர வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருக்கும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்