இந்திய கடற்படைத் தளபதி, கோத்தபய ராஜபக்‌சே பயணத்தை மறைத்தது ஏன்?- வைகோ

By செய்திப்பிரிவு

இந்தியக் கடற்படைத் தளபதி இலங்கை பயணமும், கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணமும் மத்திய அரசின் ரகசிய சதி வேலை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப் படுகொலையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசுதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது.

2007 ஆம் ஆண்டில், இந்திய - இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு தகவல்கள் தந்தும், புலிகளுக்கு வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடிக்கச் செய்தும், அப்போரில் உதவியது. அதனால்தான், யுத்தத்தில் தாங்கள் வெல்ல முடிந்தது என்றும், இப்போரை இயக்கியதே இந்தியாதான் என்றும் அதிபர் ராஜபக்சேவும், இலங்கை அமைச்சர்களும் கூறினர்.

இந்த வாரத்தில், இந்தியக் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்று, அந்நாட்டின் தலைமைத் தளபதி ஜெகத் ஜெகசூரியாவையும், கடற்படைத் தளபதி ஜெயநாத் கோலம்பேஜ் இருவரையும் சந்தித்தார். இருநாட்டு கடற்படைத் தளபதிகள் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், இருநாட்டு கடற்படையும் அனைத்து பிரச்சினைகளிலும் இணைந்தே சிறப்பாகச் செயல்படுகிறது என்றும், கடலில் மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் திறமையாகக் கையாள்வதாகவும் தெரிவித்தனர்.

அப்படியானால், தாய்த் தமிழகத்து மீனவர்கள் 578 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்தியக் கடற்படையும் கூட்டுக் குற்றவாளி என்பது நிரூபணமாகிறது.

இந்தியாவில் நான்கு ஆண்டு கால கடல்சார் பயிற்சிப் படிப்புக்கு, இலங்கை கடற்படையினருக்கு மட்டும்தான் மற்ற நாடுகளைவிட முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்தியத் தளபதி ஜோஷி கூறியுள்ளார்.

இதற்கு இடையில், இந்த வாரம் வியாழன், வெள்ளி இரு நாட்களிலும் அதிபர் ராஜபக்சேவினுடைய சகோதரன் கோத்தபய ராஜபக்சே ரகசியமாக டெல்லிக்கு வந்து, இந்திய வெளி விவகாரத்துறை அமைமச்சர் சல்மான் குர்ஷித்தையும், அவரது துறையின் உயர் அதிகாரிகளையும், ராணுவ அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த வருகையை பத்திரிகையாளர்களுக்குக்கூட தெரிவிக்காமல், மத்திய அரசு பரம ரகசியமாக மூடி மறைத்த மர்மம் என்ன?

ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து செய்து வருகிற இந்திய அரசு, சிங்களவர்களின் பலி பீடத்தில் தமிழ் இனத்தின் உயிர்களைக் காவு கொடுக்கும் கொடிய வஞ்சகத்தை மூடி மறைக்க முடியாது.

வேதனையால் வெந்துபோன தமிழர் இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு தக்கபாடத்தைத் தமிழ்ச் சமூகமும், வரலாறும் நிச்சயமாகக் கற்பிக்கும் என எச்சரிக்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

வலைஞர் பக்கம்

6 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

42 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்