மனித வடிவக்கிழங்கும், சிரிப்பூட்டும் வாயுவும்- மயக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு

By கே.கே.மகேஷ்

அக்டோபர் 16 - இன்று உலக மயக்கவியல் தினம்

வலியால் உயிர் போகிறது என்று துடிப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். வலி இல்லை என்றால் உயிர் வாழவே முடியாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வலி இல்லை என்றால் தூக்கத்தில் நம் கை, கால்களை எலி கடித்துத் தின்றாலும் தெரியாது. அடிபட்ட இடத்தில் வலி இருந்தால்தான், அந்தப் பகுதிக்கு மனிதன் ஓய்வு கொடுப்பான், காயமும் வேகமாக ஆறும்.

ஆனால், இந்த இயற்கை விதி அறுவை சிகிச்சை என்னும் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருந்தது. இயற்கையை வென்ற நிகழ்வான மயக்க மருந்து கண்டுபிடிப்பின்போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் அகில இந்திய மயக்கவியல் மருத்துவர் கழகச் செயலரும், அரசு மருத்துவருமான ஆர்.செல்வகுமார்.

“15-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் நோயாளியை 4 பேர் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள மருத்துவர் அதிவேகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட காலையோ, கையையோ வெட்டிவிடுவதுதான் அறுவை சிகிச்சையாக இருந்து வந்தது. நோயாளியோ அலறித் துடிப்பார். வேதனையைக் குறைப் பதற்காக நாளடைவில் ஆல்கஹால் கொடுத்தார்கள். பிறகு, போதைத் தாவரமான ஓபியத்தையும், மாண்ரகோரா என்ற செடியின் கிழங்கு சாறையும் பயன்படுத்தினர். அந்தக் கிழங்கு மனித உருவில் இருந்ததால், அதைப் பறிப்பவர்கள் உயிர் இழந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையும் நிலவியது.

17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்காட்சி ஒன்றில் சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்ஸைடை ஒருவருக்குப் புகட்டினார்கள். தன்னை மறந்து சிரித்தபடியே மேடையில் இருந்து இறங்கிவந்த அந்த நபர், மேஜையின் மீது இடித்துக்கொண்டார். காலில் ரத்தம் ஒழுகியதை உணராமல் தன் இருக்கையில் அமர்ந்தார். இந்தக் காட்சியைக் கண்ட பல் மருத்துவர் ஹோரஸ் வெல்ஸ், நாம் ஏன் இந்த வாயுவை வலி நீக்கியாக பயன்படுத்தக் கூடாது என்று யோசித்தார். தனக்குத்தானே அந்த வாயுவைக் கொடுத்து, பல்லைப் பிடுங்கிய அவர், மற்றொரு நோயாளிகளுக்கு அதுபோல் செய்தபோது சொதப்பிவிட்டது.

1846-ல் மார்டன் என்ற பல் மருத்துவர், நைட்ரஸ் ஆக்ஸைடுக்குப் பதிலாக ஈதர் என்ற திரவ வாயுவை உபயோகித்து வெற்றி கண்டார். அவர் கில்பெர்ட் அப்போட் என்ற நோயாளிக்கு ஈதர் கொடுத்து கழுத்தில் இருந்த கட்டியை வலி இல்லாமல் நீக்கிய நாளான அக்டோபர் 16-ம் தேதிதான் மயக்கவியல் தினமாக இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது.

பிறகு குளோரோபார்ம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜான் ஸ்னோ என்ற மருத்துவர், இங்கிலாந்து ராணியின் பிரசவத்துக்கு குளோரோபார்ம் கொடுத்து, மயக்கவியல் மருத்துவத் துக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத் தினார். இப்போது மயக்கவியல் துறை வெகுவாக வளர்ந்துவிட்டது. அறுவைசிகிச்சையின் போது நோயாளியின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தப்போக்கு போன்ற வற்றை எல்லாம் விஞ்ஞானரீதியாக அளவிட்டு கட்டுப்படுத்துகிறார் மயக்கவியல் மருத்துவர்.

அனைத்தும் அறுவை சிகிச்சை அரங்குக்குள்ளேயே நடப்பதால் அவரின் சிறந்த பணி வெளியில் தெரிவதில்லை. ஆகவே, உங்களில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்தால், மயக்கவியல் மருத்துவரை நன்றியோடு நினைத்துக் கொள்ளுங்கள். இந்தத் துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைத்து முன்னோடிகளுக்கும் ஒரு நன்றியையும் சொல்லிவிடுங்கள்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

18 mins ago

கல்வி

38 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்