அண்ணாமலை பல்கலை. ஊழியர் போராட்டத்துக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும்: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு தீர்வு காண முதல்வர் உடனே தலையிட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு 25-9-2013 அன்று சட்டமன்றத்தில் தனியாக சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டுமென்கிற நோக்கில் அரசுடைமையாக்கியது. பின்னர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக நியமித்தது.

அரசு நிர்வாகத்தின்கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஜனவரி 2012லிருந்து வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வுத்தொகை, 2013ஆம் ஆண்டிலிருந்து ஈட்டிய விடுப்புக்குரிய பணம், ஓய்வூதியதாரர்களுக்கான பயன்கள், ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்களும் ஊழியர்களும் கடந்த ஏழு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு தீர்வு காணாதது தமிழக அரசின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு உடமையாக்கியதின் நோக்கத்தைச் சீர்குலைப்பதாக உள்ளது.

தமிழகத்தின் அரும்பெரும் தலைவர்கள் உருவாக்கிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் தங்களின் டிசம்பர் மாதச் சம்பளத்தை உடனே வழங்கக்கோரியும் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த ஏழு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு இப்போராட்டத்தைக் கண்டும், காணாமல் இருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் வேதனையை அளிக்கிறது.

டிசம்பர் மாத சம்பளம்கூட வழங்காததால் ஊழியர்களின் குடும்பத்தினரும் பெரும் கவலைக்குள்ளாகியிருக்கிறார்கள். புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா கொண்டாட இயலாத நிலை உருவாகியுள்ளது. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளையும், போராட்டத்தையும் விசிக ஆதரிக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு தீர்வுகாண உடனே தலையிடவேண்டுமென்றும், ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கவேண்டுமென்றும், அவர்களது அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

அரசுடைமையாக்கியதின் நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் பல்கலைக் கழகத்தின் கடனை ஏற்றுக்கொண்டு மோசமான நிதிநிலையைச் சரிசெய்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை வலிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

8 mins ago

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

45 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்