ஜெர்மனி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அன்புமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

ஜெர்மனி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலம் சூளேரிக்காடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 3 மர்ம மனிதர்களால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த 4 குடும்பங்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாவாக வந்திருந்தனர். சூளேரிக்காடு பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த அவர்கள் அங்குள்ள நீச்சல்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஜெனி என்ற பெண்ணை மட்டும் மூவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக ஜெனி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு நாட்கள் ஆன பிறகும் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் பெருமளவிலான இயற்கை சுற்றுலாத் தலங்களும், ஆன்மிகத் தலங்களும் இருப்பது தான் இப்பெருமைக்கு காரணமாகும். தமிழகத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதுடன், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதன் மூலம் தான் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதல் இரு இடங்களில் இருந்த மராட்டியமும், கோவாவும் அந்த பெருமையை இழந்ததற்கு காரணம் அங்கு செல்லும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாதது தான். தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் இப்பெருமையை தமிழகத்தால் தக்கவைத்துக் கொள்ள முடியாது.

தலைநகர் சென்னைக்கு அருகில் இருப்பதால் மாமல்லபுரத்திற்கு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள் என்பதால் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருக்க வேண்டும். ஆனால், மாமல்லபுரத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தனியார் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பாக விடுதி நிர்வாகம் சார்பாகவோ, அந்த பெண்ணின் உறவினர்கள் தரப்பிலோ எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் மீண்டு வந்து தான் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஜெர்மனி பெண் கடத்தப்பட்டவுடன் விடுதி தரப்பிலிருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? அதனடிப்படையில் அந்த பெண்ணை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்பன போன்ற வினாக்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

வெளிநாட்டுப் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதுடன், மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்