கள்ளச்சந்தையில் மது விற்பனையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சாலை விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை 5 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி பாட்டாளி மக்கள் கட்சி மூடியது. அதன் பயன்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியுள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. அந்த சதிக்கு அரசும் துணை போவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 504 மதுக்கடைகள் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் கடந்த 2013-ஆம் ஆண்டு விடுதலை நாள் முதல் மூடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாநில நெடுஞ்சாலைகளையொட்டி 500 மீட்டருக்குள் உள்ள 3321 மதுக்கடைகள் கடந்த ஒன்றாம் தேதி மூடப்பட்டன. இதன்பயனாக கடந்த 15 நாட்களில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலுள்ள மதுக்கடைகள் மூடப்படுவதால் நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டும் தான் மது அருந்துவதை தவிர்ப்பார்கள் என்ற பொதுவான எண்ணம் தான் அனைவர் மனதிலும் இருந்தது.

ஆனால், தமிழக அரசு 70 விழுக்காடு மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தான் திறந்திருந்தது என்பதால் எளிதில் சென்று மது அருந்தும் வகையில் அமைந்திருந்த அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு விட்டன. குறிப்பாக தமிழகத்தின் பெரிய நகராட்சிகளில் ஒன்றான கும்பகோணத்திலும், புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் இராமேஸ்வரத்திலும் ஒரு மதுக்கடைக் கூட இல்லை. இதே போன்ற நிலை தான் பெரும்பாலான பேரூராட்சிகளிலும், சிறிய நகரங்களிலும் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் மது அருந்துவதற்காக குறைந்தபட்சம் 7 கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் பொழுதுபோக்குக்காக மது அருந்துபவர்கள் முற்றிலுமாக மதுப்பழக்கத்தை கைவிட்டு விட்டனர். வாரத்தில் குறைந்தது 3 முறை மது அருந்துபவர்களில் கூட 60 விழுக்காட்டினர் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாலும், மது அருந்திவிட்டு அதிக தூரம் பயணித்து வீடு திரும்ப முடியாது என்பதாலும், கூடுதல் செலவுகளை கருத்தில் கொண்டும் மதுவை கைவிட்டு, குடி அரக்கனின் பிடியிலிருந்து படிப்படியாக மீள்கின்றனர்.

இதனால் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான குடும்பங்களில் நிலவி வந்த துன்பமும், துயரமும் மறைந்து மகிழ்ச்சிப் பொங்கத் தொடங்கியிருக்கிறது. இதை அரிய வரமாகக் கருதி இதே நிலைமை தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஆனால், அதற்கு நேர் எதிரான செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை குறிப்பிட்ட இடங்களில் மாவட்ட சாலைகளாகவும், மாநகர சாலைகளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு, மற்றொருபுறம் ஆளுங்கட்சியினர் மூலம் கள்ளச்சந்தையில் மது வணிகத்தைத் தொடங்கியிருக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டிப்பெட்டியாக மதுப்புட்டிகளை வாங்கும் அதிமுகவினர், அவற்றை மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு அருகில் மறைவான இடத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதற்கு காவல்துறையினரின் ஆதரவும் உள்ளது. சில இடங்களில் அதிக கூட்டத்தைக் காரணம் காட்டி மதியம் 12 மணிக்கு முன்பாகவே மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இவை சட்டவிரோத செயல்களாகும். டாஸ்மாக் மதுக்கடைகள் சில்லறை வணிகம் செய்வதற்காக மட்டுமே திறக்கப்பட்டவை ஆகும். ஆனால், அக்கடைகளில் தனிநபர்களுக்கு பல்வேறு அளவுகளில் பெட்டிப்பெட்டியாக மது விற்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அரசு மதுக்கடைகளில் மொத்தமாக மது வணிகம் செய்யப்படுவது, 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்குடன் தான் மதுக்கடைகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பா.ம.க. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பு வெளியாகி பல மாதங்களாகியும் இன்றுவரை அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு மதிக்கும் லட்சனம் இது தான்.

மதுவை விற்று வருவாய் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆட்சி செய்யாமல், மதுக்கடைகளை மூடி மக்களைக் காக்க வேண்டும் எண்ணத்துடன் நாடாள்வதற்கு ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெண்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், அவர்களின் உணர்வுகளை மதித்து மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். அத்துடன் கள்ளச்சந்தையில் மது வணிகம் செய்யப்படுவதையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்