பல்வேறு புகார்கள் எதிரொலி: 83 மின் வாரிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ரத்து

By ஹெச்.ஷேக் மைதீன்

தமிழக மின்சார வாரியத்தில் 83 அதிகாரிகளுக்கு லஞ்ச வழக்கு கள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்த காரணத்தால், பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பதவி உயர்வு கிடைக்காத பலர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.

தமிழக மின் வாரியம் ஏற்கெனவே சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. அத்துடன் மின் உற்பத்திக் குறைவு, மின் நிலையங்களின் கோளாறு, உபகரணங்கள் தட்டுப்பாடு, வங்கிகளிலிருந்து கடன் கிடைக்காமை போன்ற பல காரணங்களால், மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

இதற்கிடையில், மின் வாரியத் தின் உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், வருவாய் ஆய்வாளர் என பல்வேறு பதவிகளிலிருப்போர், அவ்வப்போது லஞ்சம் வாங்கி மாட்டிக் கொள்வதும் தொடர்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சுமார் 70க்கும் மேற்பட்ட புகார்கள் மின் வாரியத் தலைமைக்கு கிடைத்து, இதன் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், லஞ்சப் புகார்கள், ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமை, அனுமதியின்றி விடுப்பு எடுத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுமார் 83 பொறியாளர்களுக்கு, மின் வாரியத்தில் பதவி உயர்வு வழங்க முடியாது என்று அவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

மின் வாரியத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை, மின் வாரிய பணியாளர்கள் நிர்வாகத்துறை தயாரித்தது. இதற்காக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் அவர்களது உயரதிகாரிகளான மேற்பார்வைப் பொறியாளர்களிடம் உரிய பரிந்துரைக் கடிதமும் பெறப்பட்டது.

இதில் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 83 பேருக்கு பதவி உயர்வை, மின் வாரியம் ரத்து செய்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் நிர்வாகத் துறை தலைமைப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 17ம், தேதி பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவில் பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்படாத இளநிலை மற்றும் உதவிப் பொறியாளர்களின் பெயர் விவரங்களுடன், அவர்களின் பதவி உயர்வு கிடைக்காததற்கான காரணங்களுடன், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு கிடைக்கப் பெறாதவர்களில் லஞ்ச, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 27 பேர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஆவர். 27 பேர் மீது லஞ்ச ஒழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆறு பேருக்கு பல்வேறு புகார்களால் விளக்கம் கேட்டு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு அவர்களின் மோசமான உடல்நலம் கருதி, உயரதிகாரிகள் பதவி உயர்வுக்கான பரிந்துரைக் கடிதம் அளிக்கவில்லை. மேலும் 13 பேருக்கு அவர்களது பதவி உயர்வுக்கான அறிக்கைகள் கிடைக்கவில்லை என்றும், ஒருவருக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பதவி உயர்வு அளிக்க முடியாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பதவி உயர்வு கிடைக்காதவர்களில் பலர், தாங்கள் சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். தொழிற்சங்க உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் சிலர் தயாராகி வருவதாக, மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்