உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை போதிய அவகாசத்துடன் வெளியிடுக: அன்புமணி

By செய்திப்பிரிவு

தேர்தல் தேதியை முதல் நாள் இரவில் அறிவித்து விட்டு, அடுத்த நாள் காலையில் வேட்புமனுத் தாக்கலை தொடங்குவது நியாயமல்ல. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை போதிய அவகாசத்துடன் வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக உள்ளாட்சித் தேர்தலை இந்த முறையும் அதிமுகவின் உட்கட்சித் தேர்தலைப் போலவே நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதை உறுதி செய்யும் வகையிலேயே ஆணையம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்கள் அமைந்துள்ளன.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,820 உறுப்பினர் பதவிகள், 31 மாவட்ட ஊராட்சிகளில் 919 உறுப்பினர்கள், 385 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6471 உறுப்பினர்கள், 12,524 ஊராட்சிகளுக்கு தலைவர்கள் மற்றும் 99,324 உறுப்பினர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 32,058 பதவியிடங்களுக்கு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதிக்குள் நேரடித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளைப் போலவே அடுத்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை அறிவித்து, அதற்கு அடுத்த நாளே வேட்பு மனுத்தாக்கலை தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

பாமகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவித்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பல நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளாட்சி வார்டுகளுக்கான ஒதுக்கீடு மாறும். பொது வார்டுகளாக இருந்தவை பெண்களுக்கான வார்டுகளாக மாற்றப்படக்கூடும். அதேபோல், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான வார்டுகளும் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன.

இந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சியினருக்கு அதிகாரபூர்வமாக தெரிந்தால் மட்டுமே அக்கட்சிகளால் வேட்பாளர்களை தீர்மானிக்க முடியும். வேட்பாளர்களை முன்கூட்டியே தீர்மானித்தால் தான் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை அவர்களால் தயார் செய்ய முடியும். ஆனால், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், வார்டுகளின் இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்து தேர்தலை நடத்த ஆணையிடக் கோரி பாமகவும், திமுகவும் தொடர்ந்த வழக்குகளில் இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் இந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கூறியுள்ளன.

ஆனால், எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன? எவை எவை மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன? பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எவை எவை? என்பது குறித்த பட்டியல் இருவகையாக தயாரிக்கப்பட்டு ஆளுங்கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆளுங்கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கி விட்டதாக ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதுமே ஆளுங்கட்சியால் வேட்பாளர்களை அறிவிக்க முடியும். ஆனால், எதிர்க்கட்சிகளோ தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தான் எந்தெந்த வார்டுகள் எந்தெந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அதன்பிறகு வேட்பாளர்களை அறிவித்து, வேட்பாளர்கள் அவர்களுக்குரிய ஆவணங்களை தயாரிக்க அதிக காலம் தேவைப்படும். இதனால் அவர்கள் அதிக நாட்களுக்கு பரப்புரை செய்ய முடியாது. இது அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற தத்துவத்திற்கு எதிரானது ஆகும். அதுமட்டுமின்றி, தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் இணைந்து தேர்தல் மோசடி செய்வதற்கு ஒப்பான குற்றமும் ஆகும்.

இதற்கெல்லாம் மேலாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு அளித்தல், மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துதல் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வரைவுகளுக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்படும் வரை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், கடந்த முறையைப் போலவே இம்முறையும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அது உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கும் என்பது உறுதி.

சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் அறிவிக்கப்படும் போது, அட்டவணை வெளியீடு மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கத்திற்கு இடையே குறைந்தபட்சம் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தேர்தல் தேதியை முதல் நாள் இரவில் அறிவித்து விட்டு, அடுத்த நாள் காலையில் வேட்புமனுத் தாக்கலை தொடங்குவது நியாயமல்ல.

எனவே, உள்ளாட்சி இட ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்; அதிலிருந்து ஒரு வாரத்தில் மனுத் தாக்கலை தொடங்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

17 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்