ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை காரணம் காட்டி பிரதமர் பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலாது என்று பிரதமர் கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்காக அவசரச் சட்டம் எதுவும் பிறப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்வதை பிரதமரின் பதில் உறுதி செய்திருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களின் நியாயத்தையும் இது நிரூபித்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு பிரச்சினை மிகவும் தீவிரமடைந்து வருவதால், அதை சமாளிக்கும் வகையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் விடுத்த கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த நிலைப்பாடு ஏற்க முடியாதது ஆகும்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலாது என்று கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்; தமிழக முதல்வரே நேரில் சந்தித்து அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்; தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து இந்தக் கருத்தை வலியுறுத்த நேரம் கேட்கின்றனர்; இவ்வளவுக்குப் பிறகும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க பிரதமர் மறுக்கிறார் என்றால் அவர் தமிழகத்தின் மீது ஒவ்வாமை கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அந்த வழக்கு சார்ந்த பொருள் தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. உதாரணமாக, கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பித்தது. அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலையில் மீண்டும், மீண்டும் நான்கு முறை அவசரச் சட்டங்களை பிறப்பித்து வந்தது.

மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகும் அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்தது. ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது என்பது மத்திய அரசுக்குத் தெரியாதா? என்பதை பிரதமர் விளக்கவேண்டும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்திற்கு உரிய மதிப்பளித்து வந்திருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. ஜல்லிக்கட்டு குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி தலைமையிலான அமர்வு தான் காவிரி பிரச்சினை குறித்த வழக்கையும் விசாரித்து வருகிறது. காவிரி வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்ட போது, முதலில் அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மிரட்டலாகக் கூறி ஆணையை திரும்பப் பெற வைத்தது.

அதேபோல், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தாக்கூருடன் வெளிப்படையான மோதல் போக்கை கடைபிடித்ததுடன், அவர் தலைமையிலான நீதிபதிகள் குழுவின் பரிந்துரைகளையும் கிடப்பில் போட்டது. இப்படிப்பட்ட அரசு உச்ச நீதிமன்றத்தை மீறி எதையும் செய்யக்கூடாது என கூறுவது விந்தையிலும் விந்தை. மத்திய அரசின் இந்த தமிழர் விரோத அணுகுமுறைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரை சந்தித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்றும், அதற்கான தமிழக அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்ன செய்ய முடியும்? என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டை உறுதி செய்யும் வகையில் அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஒருவேளை எதுவும் சாத்தியமில்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்