குளம் அமைத்து அக்கறையான முயற்சியை மேற்கொண்ட தருமபுரி போலீஸார்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி ஆயுதப்படை வளாகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் போலீஸார் குளங்கள் அமைத்து அக்கறையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான ஆயுதப்படை வளாகம் வெண்ணாம்பட்டி பகுதியில் 38 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வளாகத்தில் காவலர்களுக்கான குடியிருப்புகள் 350 கட்டப்பட்டுள்ளன. இவை தவிர, 200-க்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் சுழற்சி முறையில் இங்கு பயிற்சி பெறுகின்றனர்.

மேலும், காவலர் சமுதாயக் கூடம், நிர்வாக பிரிவு கட்டிடங்களும் அமைந்துள்ளன. இவற்றுக்கென சுமார் 10 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டபோதும் 28 ஏக்கர் நிலம் காலி இடமாக உள்ளது. இதிலும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இடம் முழுக்க ஆங்காங்கே வேம்பு, புங்கன், தேக்கு உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில் ஆயுதப்படை வளாக பயன்பாட்டுக்கென ஒரு கிணறு உள்ளது. இதுதவிர, 5 ஆழ்குழாய் கிணறுகளும் உள்ளன. இவற்றில் 3 ஆழ்குழாய் கிணறுகள் ஏற்கெனவே வறண்டு விட்டன. ஓரளவு தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த 2 ஆழ்குழாய் கிணறுகளும் சமீபத்திய கோடை வறட்சியில் வறண்டது. இதனால், ஆயுதப்படை வளாக தேவைகளுக்கென தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில் பரந்து கிடக்கும் ஆயுதப்படை வளாக பகுதியில் மழைக்காலத்தில் மழைநீரை முழுமையாக சேமிக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி-யும், காவலர் பயிற்சி பள்ளியின் துணை முதல்வருமான (பொறுப்பு) மணிகண்டன், ஆயுதப்படை வளாக டிஎஸ்பி சொக்கையா ஆகியோர் தெரிவித்தனர். கண்காணிப்பாளர் சில வழிகாட்டுதல்களை வழங்கி திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து, முழுமையாக வறண்டுபோன ஆழ்குழாய் கிணற்றை மையத்தில் விட்டு சுற்றிலும் மழைநீர் தேங்குவது போன்று குளம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயுதப்படை காவலர்களின் உடலுழைப்பு, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றின் மூலம் 5 நாட்களில் இதுபோன்று 3 குளங்கள் தயாரானது. இதற்கு தேவைப்பட்ட ரூ.12 ஆயிரம் பணத்தை காவல்துறையினர் தங்களின் சொந்த பங்களிப்பாக வழங்கியுள்ளனர்.

குளங்கள் தயாரான நிலையில் தொடர்ந்து தருமபுரியில் பருவமழை பெய்து வருவதால் குளங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. தேங்கி நின்ற தண்ணீரின் உதவியால் வளாகத்தில் உள்ள கிணற்றில் தற்போது நீர் ஊறத் தொடங்கி விட்டது. இதுதவிர, இறுதியாக வறண்டுபோன 2 ஆழ்குழாய் கிணறுகளிலும் தற்போது தண்ணீர் வரத் தொடங்கி விட்டன.

இதுகுறித்து சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, "தங்களுக்கான தண்ணீர் தேவையை தங்கள் வளாகத்திலேயே நிறைவு செய்து கொள்ளும் வகையில் காவல்துறையினர் ஆயுதப்படை வளாகத்தில் விழும் மழைநீரை முழுமையாக சேமிக்கத் தொடங்கியிருப்பது அக்கறையான முயற்சி. அரசு வளாகங்கள் அனைத்திலும் இதுபோன்ற முயற்சிகள் பரவலாகும்போது தண்ணீர் தேவைகளுக்கான பொருளாதார விரயங்கள் பெருமளவில் தவிர்க்கப்படும்" என்றனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

கருத்துப் பேழை

36 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

44 mins ago

உலகம்

51 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்