தலித் பிரச்சினைககளில் கருணாநிதி, ஜெயலலிதாவின் செயல்பாடு: மனம் திறக்கும் திருமாவளவன்

By செய்திப்பிரிவு

தலித் பிரச்சினைகள் குறித்துச் சொல்லும் போது அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு கருணாநிதி, ஜெயலலிதா செயல்பட்ட விதம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

கல்வி, வேலை என தன்னிறைவு பெற்ற நிலையில், அரசியலுக்கு எப்படி வந்தீர்கள்?

அரசியலில் திட்டமிட்டு இறங்கவில்லை. இதுவொரு விபத்து என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஆர்வம் இருந்தது. சென்னைக்கு வந்த பிறகு, ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் எல்லாம் கலந்துகொண்டேன். அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கருத்துகளை அறிந்ததும் விவாதித்ததும் என்னை அரசியலுக்குத் தூண்டின.

சொல்லப்போனால், அரசு வேலையில் இருந்தபோதுதான், அதிக தீவிர அரசியலில் இறங்கினேன். தடய அறிவியல் துறையில் உதவியாளராக, மதுரையில் பணியாற்றிய போது, கற்பனை செய்யமுடியாத அளவுக்கு சாதியக் கொடுமைகள் நிகழ்ந்தன. அதை நேரில் கண்டேன். அது என்னை நேரடி அரசியலுக்கு கொண்டு வந்தது.  

இப்போதைய சூழலில் தமிழகத்தில் தலித் சமூகத்திலிருது ஒருவர் முதல்வராவது சாத்தியமா?

தலித் முதல்வர் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. அதற்குத் தகுதி படைத்தவர்கள் இருந்தாலும், அதற்கான சூழல் இன்னும் கனியவில்லை.

இங்கே, தமிழகத்தில் பெரிய இறுக்கம் இருக்கிறது. தலித்துகளுக்கு எதிரான பார்வை இருக்கிறது. அம்பேத்கருக்கு எதிரான பார்வை இருக்கிறது. இங்கே, தமிழகத்தில் சாதி இந்துக்களுக்கு எதிராக தலித்துகள் செயல்படுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் பெரிய சக்தியாக இங்கு தலித்துகள் உருவெடுக்கவில்லை.

மற்ற மாநிலங்களில் உள்ள அளவுக்குக் கூட இங்கு தலித்துகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. உத்தரப் பிரதேசத்தில் தலித் தலைவர் மாயாவதி முதல்வராக முடிந்தது. சனாதனக் கொள்கைகள் அதிகம் கொண்ட மாநிலத்தில், இது சாத்தியமாகியிருக்கிறது. அப்படியான நெகிழ்வுத்தன்மை தமிழகத்தில் இன்னும் வரவில்லை என்றுதான் கருதுகிறேன். அப்படியொரு சூழல் வரும் என்றும் நம்புகிறேன்.

பட்டியலின மக்கள் குறித்துப் பேச முடியவில்லை என்றால், கட்சியில் இருந்து வெளியே வாருங்கள். நாங்கள் உங்களை ஜெயிக்க வைக்கிறோம் என்று இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்தார். இரண்டுபேருமே அம்பேத்கரைப் படித்தவர்கள். ஆனாலும் ஏனிந்த முரண்பாடு?

இதில் முரண்பாடு என்று இல்லை. அவருடைய கருத்தை ஆர்வத்துடன் அவர் சொல்லியிருக்கிறார். இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நாங்கள் தெரிவித்தோம். அவ்வளவுதான்.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களுடனும் பழகியிருக்கிறீர்கள். தலித் பிரச்சினைகளைக் கொண்டு செல்லும்போது, வெகு இயல்பாக, அவற்றையெல்லாம் கேட்டு தீர்வுக்குச் செயல்பட்டது யார்?

ஜெயலலிதாவுடன் அப்படி நெருங்கிப் பழகியதாகச் சொல்லிவிடமுடியாது. ஆனால், கலைஞருடன் அப்படிப் பழகியிருக்கிறேன். திருமாவளவன் என்றில்லை... எல்லோரையும் கலைஞர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அழைத்து உரையாடுவார். கருத்துகளைக் கேட்பார். அப்படியொரு குணம் கலைஞருக்கு இருந்தது.

நெல்லையில் மாநாடு நடத்தினோம். அதில், 5 சென்ட் மனைப்பட்டா வழங்கவேண்டும், இந்திரா குடியிருப்பில் ஒன்றரை லட்ச ரூபாயில் வீடு என்பதை நிதியை அதிகப்படுத்த வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க குழு அமைக்கவேண்டும் என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அவற்றையெல்லாம் கலைஞர் வரவேற்றார்.

அதேபோல், மறைமலை நகரில் நடந்த விழாவில் கலந்துகொண்ட கலைஞர், பஞ்சமி நிலங்களுக்காக ஒரு கமிஷன் நியமித்தார்.

முக்கியமாக, தருமபுரியில் திவ்யா - இளவரசன் காதலையொட்டி, மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இவற்றையெல்லாம் பாமகதான் தூண்டிவிடுகிறது என வெளீப்படையாகவே பேட்டியில் சொன்னேன். மேலும் கலைஞரிடம் சென்று, உண்மை கண்டறியும் குழு ஒன்றை அனுப்பி விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தேன். உடனடியாக குழு ஒன்றை அனுப்பி, அந்தக் குழு சமர்ப்பித்த முழுவிவரங்களையும் ‘முரசொலி’யில் வெளியிட்டார் கலைஞர்''.

இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

23 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

25 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்