வாக்கி டாக்கி உதவியுடன் கொள்ளை; தென்னிந்தியாவை கலக்கிய கொள்ளையர்கள் அண்ணாநகரில் கைது: 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, சொகுசுக் கார் பறிமுதல்

By செய்திப்பிரிவு

நவீன முறையில் வாக்கி டாக்கி உதவியுடன் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் தினகரன் கூட்டாளிகளுடன் அண்ணா நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். முக்கிய கூட்டாளியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் வங்கியில் ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இதில் முக்கியக் குற்றவாளி திருவாரூர் முருகன் என்ற எய்ட்ஸ் நோயாளி. இவரது கூட்டாளிகள் தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் கிலோ கணக்கில் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆந்திராவில் கொள்ளையடித்தால், கேரளாவுக்குத் தப்பிச் செல்வது, கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு தமிழகம் தப்பி வருவது என்று நான்கு மாநில போலீஸாருக்கு தண்ணீர் காட்டும் இவர்களில் 7 பேரை இதுவரை அண்ணா நகர் போலீஸார் கைது செய்துள்ளனர். முக்கியத் தலைவனான திருவாரூர் முருகன் இதுவரை சிக்கவில்லை.

நடந்தது என்ன?

கடந்த சில மாதங்களாக அண்ணா நகர் பகுதியில் 19-க்கும் மேற்பட்ட தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை குறித்த விசாரணையில் போலீஸார் குறிப்பிட்ட நகர்வுக்கு மேல் செல்ல முடியாத அளவுக்கு சாமர்த்தியமாகச் செயல்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திக் கொள்ளையர்களைப் பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாதம் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏப்ரல் 15-ம் தேதி, முக்கியத் தகவல் ஒன்று கிடைத்ததது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து செயல்பட்டனர். 9 குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கொள்ளையர்கள் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவர். இதில் போலீஸாரின் தீவிர தேடுதலில் மணிகண்டன், ரகு, மூர்த்தி, கோபால் ஆகியோர் சிக்கினர்.

இவர்களில் சிலர் கொள்ளையடித்த பொருட்களை வாங்கி விற்றுத்தரும் புரோக்கர்கள். அவர்களிடம் தீவிரமாக நடத்திய விசாரணை தொடர் முயற்சி காரணமாக 4 மாதங்களுக்குப் பிறகு முக்கிய குற்றவாளியான தினகரன் (31) மற்றும் அவருக்கு உதவிய கூட்டாளிகள் லோகநாதன், காளிதாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதில் பிடிபட்ட தினகரன் தான் முக்கிய குற்றவாளி, இவரும் திருவாரூர் முருகனும் கூட்டாளிகள், இவர்கள் மீது நான்கு மாநிலங்களிலும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த வழக்குகள் உள்ளன. இதில் இன்னும் திருவாரூர் முருகன் உட்பட இருவர் சிக்கவில்லை.

கைதான தினகரனிடமிருந்து 3 கிலோ தங்கக்கட்டிகள், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள், 1000 அமெரிக்க டாலர்கள், ஒரு சொகுசுக் கார், 3 வாக்கி டாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர். இன்னும் அவர்களிடம் விசாரணை நடத்தி மேலும் 19 வழக்குகளில் தொடர்புடைய நகைகளை மீட்க வேண்டியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

எப்படி திருடுகிறார்கள்?

கொள்ளையன் திருவாரூர் முருகன் தான் மூளையாகச் செயல்படும் தலைவன். தினகரன் முக்கிய வலது கரம். இவர்கள் தெளிவாக போலீஸாரை திட்டமிட்டு ஏமாற்றி கொள்ளையடித்து தப்பித்து வந்துள்ளனர். ஒரு ஏரியாவை தேர்வு செய்தால் அங்கு பகலில் போலீஸார் போல் ரோந்து வருவார்கள்.

பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் இவர்கள் அந்த வீட்டில் பூட்டுக்கு இடையே விளம்பரம் செய்யும் நோட்டீஸ் அல்லது ஏதாவது பேப்பரைச் செருகிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆட்கள் இருக்கும் வீடுகள் என்றால் பூட்டைத் திறப்பவர்கள் பேப்பரைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். அப்படி பேப்பர் இல்லாத வீடுகள் பக்கம் செல்லவே மாட்டார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் பேப்பர் எடுக்கப்படாமல் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். திருடுவதற்கென்று தனியாக உபகரணம் ஒன்றைத் தயாரித்து வைத்துள்ளார்கள். அதைக் காட்டினால் மற்ற கொள்ளையர்கள் பிரதி எடுத்துவிட வாய்ப்புண்டு என்பதால் போலீஸார் அதை தவிர்த்துவிட்டனர்.

அந்தக் கருவியால் பூட்டை எளிதில் உடைக்கவும், மரக்கதவுகளை பெயர்த்து லாக்குகளை உடைக்கவும் முடியும். அந்தக் கருவியைப் பயன்படுத்தி இரவில் தங்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். சொகுசுக் காரில் வலம் வந்து இரவில் இவர்கள் கொள்ளை அடிப்பதால் யாரும் சந்தேகப்படவில்லை.

தங்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற எவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் கயிறு வீசி ஏறி உள்ளே இறங்கவும் தயாராக பிரத்யேகக் கயிறுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்காகப் பயிற்சியும் எடுத்துள்ளனர். கொள்ளை அடிக்கும் சமயம் வேவு பார்க்க, உள்ளே பல அறைகளில் கொள்ளை அடிக்கும் இருவர் என மூன்று பேர் ஆளுக்கொரு வாக்கி டாக்கியுடன் களத்தில் இறங்குவார்கள். கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்த மாட்டார்கள்.

வெளியே நிற்பவர் வெளியில் உள்ள நிலையை வாக்கி டாக்கியில் அவ்வப்போது தெரிவிப்பார். தேவையான உதவிகள் செய்வார். உள்ளே திருடச் செல்பவர்கள் தங்களுக்குள்ளும் வாக்கி டாக்கியில் பேசிக்கொள்வார்கள். இதனால் கொள்ளை நடந்த பின்னர் போலீஸார் அப்பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை எடுத்தாலும் இவர்கள் சிக்காமல் இருந்துள்ளனர்.

போலீஸார் கொள்ளையர்களைப் பிடிக்க தங்களுக்குள் வாக்கி டாக்கி கருவியைப் பயன்படுத்துவார்கள், ஆனால் கொள்ளையர்கள் தங்களுக்குள் வாக்கி டாக்கியைப் பயன்படுத்தி ஓவர், ஓவர் என ஓவர் நைட்டில் பல தொழிலதிபர்களின் தங்கம், லட்சக்கணக்கில் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடித்த பின்னர் லோகநாதன், காளிதாஸ் போன்றவர்களிடம் தங்க நகைகளைக் கொடுத்துவிடுவார்கள். ரொக்கப்பணத்தை வைத்து ஜாலியாக அண்டை மாநிலங்களுக்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள். நகைகளை வாங்கிய புரோக்கர்கள் லோகநாதன், காளிதாஸ் அதை உருக்கி விற்று காசாக்குவார்கள்.

அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை கொள்ளையர்கள் அக்கவுண்டில் போட்டுவிடுவார்கள். நவீனத்தைத் தன்வசப்படுத்தி கொள்ளையடித்து வந்த கூட்டம் பிடிபட்டாலும், இன்னும் இரண்டு முக்கிய குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே கொள்ளை சம்பவம் முடிவுக்கு வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்