அமித் ஷாவின் தமிழக வருகையில் அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

By செய்திப்பிரிவு

 பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

லோக் ஆயுக்தா வலுவான அமைப்பாக இருக்குமா? மக்களிடம் கருத்து கேட்கவில்லை என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளதே?

லோக் ஆயுக்தா மசோதா இன்று சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அது வலுவான அமைப்பாக இருக்குமா என்ற கேள்விக்கு சிறிது காலத்தில் விடை தெரியும். அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் பதில் சொல்வோம்.

கட்சியை வலுப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வருகை தருவதாக கூறப்படுகிறதே?

பாஜகவுக்கு என வரைமுறை உள்ளது. அது அந்தக் கட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. கட்சியை வலுப்படுத்த தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருகிறார். அமித் ஷா வருகையில் அரசியல் உள்நோக்கம் இல்லை.

அடுத்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக தான் கூட்டணி வைக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறாரே?

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேர்தல் நேரத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். திருநாவுக்கரசர் ஏன் அவசரப்பட்டு சொல்கிறார் எனத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக நினைத்துப் பேச வேண்டும். 1967-லேயே காங்கிரஸுக்கு சமாதி கட்டியாகி விட்டது. காங்கிரஸ் இனி எழப்போவது இல்லை. அனுமானத்தின் அடிப்படையில் கருத்து சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் அதிமுகவின் நிலைப்பாடு திமுகவுடன் வேறுபட்டுள்ளதே?

இதுதொடர்பாக அதிமுக சார்பில் சட்ட ஆணையத்திற்கு கடிதம் வழங்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள் சட்ட ஆணையத்தில் கருத்து சொல்லியிருக்கின்றனர். நானும் ஏற்கெனவே விளக்கம் அளித்திருக்கிறேன். 5 ஆண்டுகள் ஆட்சி நடைபெற வேண்டும். அதன்படி 2021-ல் தான் ஆட்சி முடிகிறது. இந்த கொள்கையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதனால், அதனை அமல்படுத்தலாம். ஆனால், 2024-ல் அமல்படுத்தலாம் என்பது அதிமுகவின் வாதம். அதனை சட்ட ஆணையத்தில் சொல்லியிருக்கிறோம். திமுக அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வை தனியார் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதே?

இன்றைக்கு சட்டப்பேரவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்படலாம். அதற்கு முன்பு கருத்து சொல்வது சரியான செயல் அல்ல. சபாநாயகராக நானும் இருந்திருக்கிறேன் என்பதால், எனக்கு விதிகள் தெரியும். சட்டப்பேரவையில் இதற்கு விடை தெரியும்.

சத்துணவுக்கு முட்டை விநியோகிக்கும் நிறுவன உரிமையாளர்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. முட்டை வடிவத்தில் அணுகுண்டு என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்?

அரசின் மீது புழுதியை வாரித் தூற்றும் எண்ணம் தான் டிடிவி தினகரனுக்கு உள்ளது. பொழுது விடிந்தால் அரசைத் தாக்கிப் பேசுவது அவரின் வாடிக்கையாகி விட்டது. வருமான வரி சோதனைக்கும் கோழி முட்டைக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்கு வந்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சிலர் இப்படித்தான் சொல்வார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

5 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

19 mins ago

வலைஞர் பக்கம்

23 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

41 mins ago

க்ரைம்

38 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்