காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருணாகரநல்லூரில், தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து சென்றதால் அவமானமடைந்த தமிழரசன் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாகரநல்லூரைச் சேர்ந்த விவசாயி தமிழரசன் தம்மிடம் இருந்த பழைய டிராக்டரை கடந்த ஆண்டு விற்பனை செய்துவிட்டு, கோட்டக் மஹிந்திரா நிறுவனத்திடம் கடன்பெற்று புதிய டிராக்டரை வாங்கி உள்ளார். இதற்காக வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியை தலா ரூ.90 ஆயிரம் வீதம் 8 சம தவணைகளில் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன்படி முதல் இரு தவணைகளை சரியாக செலுத்தி விட்ட தமிழரசன், கடந்த மாதம் செலுத்த வேண்டிய ரூ.90,000 தவணையில் ரூ.50 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு கரும்புக்கான கொள்முதல் விலை கிடைத்ததும் கட்டுவதாகக் கூறி கால அவகாசம் பெற்றிருக்கிறார். ஆனால், 10 நாட்களில் கடன் தவணையை செலுத்தா விட்டால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கை அனுப்பிய நிதி நிறுவனம், அதன்படியே அடியாட்களை அனுப்பி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது. இதனால் அவமானம் அடைந்த உழவர் தமிழரசன் தமது விவசாய நிலத்தில் கத்தரிச் செடிக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எந்தத் தவறும் செய்யாத உழவர் தமிழரசனை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது நிதி நிறுவனத்தின் சட்ட விரோத செயல்கள் தான்; இது கண்டிக்கத்தக்கது.

டிராக்டர் கடனுக்கான தவணைகளை தமிழரசன் தவறாமல் செலுத்தி வந்திருக்கிறார். கரும்பு கொள்முதல் செய்ததற்காக சர்க்கரை ஆலை கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைத்ததும் தவணையை செலுத்த அவர் திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனால், சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்காத நிலையில், தம்மிடம் இருந்த தொகையை செலுத்தி விட்டு, கூடுதல் அவகாசம் பெற்றுள்ளார். நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியக் கடனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும். தவணையை தமிழரசன் செலுத்த முடியவில்லை என்றால் கூட, அதற்காக அபராதமோ, கூடுதல் வட்டியோ வசூலிக்கலாமே தவிர, வாகனத்தை பறிமுதல் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் வழங்கிய பல தீர்ப்புகளில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் எளிய இலக்குகளான அப்பாவி விவசாயிகளை தாக்கியும், மிரட்டியும் வாகனங்களை பறிமுதல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதே காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தவணை செலுத்தாததற்காக இரு விவசாயிகளை தாக்கி, அவர்களின் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட முத்துராமலிங்கம் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அரியலூர் மாவட்டம் ஓரத்தூரைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கி அதிகாரிகள் தம்மை அவமானப்படுத்தி டிராக்டரை பறிமுதல் செய்ததால் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் போந்தல் கிராமத்தில் கடன் தவணை செலுத்தாததற்காக ஞானசேகரன் என்ற விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த வங்கி அடியாட்கள், அவரைத் தாக்கியதில் உயிரிழந்தார். விவசாயிகளுக்கு எதிரான வங்கிகளின் அத்துமீறல் இப்படியாகத் தொடர்கிறது.

அதிலும் குறிப்பாக கோட்டக் மஹிந்திரா நிறுவனம் தான் இத்தகைய அத்துமீறல்களில் அதிகமாக ஈடுபடுகிறது. உதாரணமாக, தஞ்சை மாவட்டம் சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்ற விவசாயி கோட்டக் மஹிந்திரா நிறுவனத்தில் டிராக்டர் கடன் வாங்கியிருந்தார். 95% கடனை திருப்பி செலுத்தி விட்ட இவர் கடைசி தவணையில் ரூ.32,000 மட்டும் பாக்கி வைத்திருந்தார். அதற்காக அவரது டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த வங்கி அதிகாரிகள் அவரைக் கடுமையாக தாக்கினார்கள். இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்த பிறகும் கூட இத்தகைய நிகழ்வுகள் தொடருகின்றன.

விவசாயிகளிடம் இந்த அளவு கடுமை காட்டும் வங்கி நிர்வாகங்கள் பெருந்தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனை வசூலிப்பதில் மட்டும் கனிவு காட்டுகின்றனர். அந்நிறுவனங்கள் கடனை செலுத்தாவிட்டால், அதை தள்ளுபடி செய்து தயவு காட்டுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் வாங்கிய ரூ.1.69 லட்சம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் கடன் வாங்கி ஏமாற்றியதால் மட்டும் கடந்த ஆண்டில் வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்களின் கண்ணுக்கு வெண்ணெய், விவசாயிகளின் கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற வங்கிகளின் அணுகுமுறை ஆபத்தானதாகும்.

கடன் செலுத்த முடியாததற்காக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கான கொள்கை வகுக்கப்பட்டு வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். விவசாயி தமிழரசன் தற்கொலை செய்து கொண்டதற்கு வங்கியின் சட்ட விரோத செயலும், சர்க்கரை ஆலை குறித்த காலத்தில் நிலுவைத் தொகையை வழங்காததும் தான் காரணம் என்பதால் தமிழரசன் தற்கொலை வழக்கில் அவற்றையும் சேர்த்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். விவசாயி தமிழரசனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

சினிமா

32 mins ago

சுற்றுச்சூழல்

55 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்