பொறியியல் தரவரிசை பட்டியலை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்; 10 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்- ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 10 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் பொது கலந்தாய்வு மூலம் சேர 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் கடந்த 5-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தரவரிசைப் பட்டியலில் 10 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள மாணவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும். அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து, மாணவர் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தில் குறைகளைத் தெரிவித்து சரிசெய்துகொள் ளலாம்.

ஆன்லைன் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தோம். எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடக்க உள்ளதால், 10-ம் தேதிக்குப் பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொறியியல் மாணவர் சேர்க்கையை ஜூலை இறுதிக் குள் முடிக்க வேண்டும். ஆனால், கலந்தாய்வு தொடங்க தாமதம் ஆவதால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி மாணவர் சேர்க்கையை நீட்டிக்க அவகாசம் பெறப்படும். இதனால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் முறை யில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் (சாப்ட்வேர்), தொழில்நுட்ப வசதிகள் தயாராக உள்ளன. மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் இருந்து 18,771 இடங்கள் கலந்தாய்வுக்கு வந்துள்ளன. கலந்தாய்வை 5 அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கல்விக் கட்டணம் எவ்வளவு?

கலந்தாய்வு மூலம் மாணவர் கள் சேரும் பட்சத்தில் தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு ரூ.55 ஆயிரம், தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம், அதேபோல், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் தரச்சான்று படிப்புகளுக்கு ரூ.87 ஆயிரம், தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு ரூ.85 ஆயிரம் என கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் செய்வதற்கான குழு விரைவில் அமைக்கப்படும்.

ஆட்குறைப்பு கூடாது

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:15 என இருந்தது. இதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) 1:20 என திருத்தி அமைத்துள்ளது. இதற்காக, பணியில் உள்ள ஆசிரியர்களை யாரும் வேலையில் இருந்து நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்குவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ஆர்க். படிப்பு

பி.ஆர்க். படிப்பில் கலந்தாய்வு மூலம் 3 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும். தேசிய கட்டிடக்கலை கவுன்சில் (நாட்டா) நடத்திய தேசிய திறனறி தேர்வில் 3,374 பேர் தகுதி பெற்றுள்ளனர். பி.ஆர்க். மாணவர் சேர்க்கை தொடர்பாக ஜூலை 2-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. அதன்பிறகு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இதில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ், பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல் 10 இடம் பிடித்தவர்கள்

பொறியியல் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 10 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் கோவை மாணவி ஆர்.கீர்த்தனா, மதுரை மாணவர் எஸ்.ரித்விக், திருச்சி மாணவி ஆர்.ஸ்ரீவர்ஷினி ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். இந்த 10 பேரில் 7 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், ஒருவர் எஸ்.சி. வகுப்பையும் சேர்ந்தவர்கள். தொழிற்கல்வி பாடப்பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆர்.வி.ஸ்ரீஹரி 200-க்கு 199.83 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், பி.ஸ்ரீராமன் 199.67 கட் ஆஃப் பெற்று 2-ம் இடத்தையும், ஆர்.சுரேகா 199.33 கட் ஆஃப் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் மூவரும் கோவையைச் சேர்ந்தவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

58 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்