காவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா? - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

காவிரி சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என, கர்நாடகத்தின் புதிய முதல்வர் குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசும், கர்நாடக அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். குமாரசாமியின் இந்த யோசனை மிகவும் ஆபத்தானது. காவிரியில் தமிழகத்திற்கு உள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

காவிரிப் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லாத நிலையில் இது பயனற்ற அமைப்பு என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

அதேநேரத்தில் இயல்பான மழைக்காலங்களில் காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின்படியும், வறட்சிக்காலங்களில் இடர்பாட்டுக்கால நீர்ப்பகிர்வு முறைப்படியும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தினால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடும். எனவே, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக புதிய முதல்வர் குமாரசாமி நினைத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும்.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்றால் தமிழகமும், கர்நாடகமும் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறுவது உச்சநீதிமன்றம் போன்ற சட்ட அமைப்புகளையும், தமிழக மக்களையும் முட்டாள்களாக்கும் செயலாகும்.காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விஷயத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழகத்திற்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்றாலும் கூட இன்றைய நிலையை எட்ட தமிழகம் பட்ட பாடுகளும், நடத்திய சட்டப் போராட்டங்களும் ஏராளமானவை.

காவிரி நடுவர் மன்றம் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பின்னர், 17 ஆண்டுகால விசாரணைகளுக்குப்பிறகுதான் 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பு வெளியான சில மாதங்களில் அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியம் 11 ஆண்டுகள் கழித்தே அரை-குறை அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாக அத்தகைய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல கட்டங்களில் சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றையும் கணக்கில் கொண்டால் காவிரிப் பிரச்சினையில் இன்றைய நிலையை எட்ட குறைந்தது 35 ஆண்டுகள் தமிழகம் சட்டப் போராட்டம் நடத்தியுள்ளது.

35 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி, அதன் மூலம் காவிரிப் பிரச்சினையில் இழந்த உரிமைகளில் ஓரளவை தமிழகம் மீட்டெடுத்துள்ள நிலையில், அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதே மனசாட்சியை கழற்றி அடகு வைத்து விட்டு பேசும் பேச்சு ஆகும். காவிரி நீர்பகிர்வு தொடர்பாக தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே 1924 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 இதற்காக 1960-களின் இறுதியில் தொடங்கி 1970-களின் இறுதி வரை சுமார் 10 ஆண்டுகள் பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை, அதனால் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. காவிரி விவகாரம் இந்த அளவுக்கு மோசமாகியிருப்பதற்கு அது தான் காரணம் ஆகும்.

அண்ணா காலத்திலிருந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலம் வரை காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் கர்நாடகத்தின் பிடிவாதமும், சட்டத்தை மதிக்காத போக்கும் தான்.

காவிரிப் பிரச்சினை குறித்த கடந்த கால உண்மைகள் இவ்வாறு இருக்கும் நிலையில், காவிரி சிக்கல் எந்த இடத்தில் தொடங்கியதோ அந்த இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி சிக்கலை பேசித்தீர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.

 தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர். இந்த யோசனைகள் காவிரிப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கி விடும்.

எனவே, காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது. மாறாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

‘அன்பையும், மதிப்பையும் என் தந்தை எனக்குக் கற்பித்துள்ளார்’: ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்

காங்கிரஸை காத்த ‘கிங் மேக்கர்’ சிவகுமார்

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகள் ஒதுக்கீடு முறையில் மாற்றம்; இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ புகார்

“சாவித்ரிக்கு குடியைக் கற்றுக் கொடுத்தது அப்பா இல்லை” - கமலா செல்வராஜ் விளக்கம்

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

1 min ago

இந்தியா

23 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

49 mins ago

கருத்துப் பேழை

57 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்