‘‘தொழிலாளர் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க உறுதி கொள்வோம்’’ - வைகோ மே தின வாழ்த்து

By செய்திப்பிரிவு

தியாகம் செய்து பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் மே நாளில் உறுதி கொள்வோம் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “முதலாளித்துவ நுகத்தடியில் அடிமைகளாகப் பூட்டப்பட்டிருந்த உலகத் தொழிலாளர்கள் விடுதலை பெற்ற வீர வரலாறு பிரகடனம் செய்யப்பட்ட நாள்தான் மே நாள் ஆகும்.

உதயசூரியன் உதிக்கும் அதிகாலை முதல், அந்தி சாயும் வேளை வரை தொழிலாளர் வர்க்கம் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்ட கொடுமைக்கு முடிவுகட்ட 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உரிமைக்குரல் எழுப்பப்பட்டது.

16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்கள் முதன் முதலில் 1806 இல் அமெரிக்க பிலடெல்பியா நகரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவில் 1866 இல் உருவான தேசிய தொழிற்சங்கம், எட்டு மணி நேரம் வேலை நாள் என்பதை சட்டமாக்க வேண்டும் என்று போராடியது.

1877 இல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். 1884 இல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது எரிமலையென வெடித்தப் போராட்டங்கள்தான் மே நாள் எழுச்சியாக வடிவம் பெற்றன.

1886 இல் 8 மணி நேர வேலை நாளுக்கானப் போராட்டம் தீவிரமடைந்தது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 1886 மே முதல் நாள் சிகாகோ நகரில் தொழிலாளர் போராட்டம் உச்சத்தை எட்டியது. அரசின் அடக்குமுறை தர்பார் தலைவிரித்து ஆடியது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 1886 மே 3, 4 ஆகிய நாட்கள் காவல்துறையினர் தாக்குதல் எல்லை கடந்தன. சிகாகோ நகரில் உள்ள ‘ஹே மார்க்கெட்’சதுக்கத்தில் கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடிய இந்த வன்முறையில் நான்கு தொழிலாளர்கள் பலி ஆகினர். தொழிலாளர் தலைவர்களான பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், பிர் மற்றும் எங்கல் ஆகிய நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.

‘ஹே மார்க்கெட் தியாகிகள்’ என்று வரலாறு போற்றுகின்ற தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் எட்டு மணி நேர இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றது. 1889 மே முதல் நாள் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது.

அதற்கு அடுத்த ஆண்டு 1890 மே முதல் நாள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப்பிடிக்கும் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டது.

உலகத் தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி, உயிர்ப் பலிகள் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமைதான் எட்டு மணி நேரம் வேலைநாள் என்பது உலகம் முழுவதும் சட்டமாக்கப்பட்டது.

இந்தியாவில் நாடு விடுதலைபெற்ற பின்னர் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போதைய மத்திய அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள், அனைத்தும் குப்பைக் கூடையில் வீசி எறிந்து இருக்கிற மத்திய அரசு, தற்போது ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ (Fixed Term Employment)’ என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டுவர டிசம்பர் 2017 இல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில், ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத்தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு தூக்கி எறியும் வகையில் ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ என்ற பெயரில் மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் இதயமார்ந்த மே நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்” என வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்