வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே அவகாசம்: ஆர்.கே.நகரில் போட்டியிட கங்கை அமரன் மறுப்பு - புதிய வேட்பாளரை தேடும் பாஜக

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கங்கை அமரன் மறுத்துவிட்டதால் வேறு வேட்பாளரைத் தேடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியரான கங்கை அமரன், பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், வாக்குப்பதிவுக்கு 2 நாட்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப் பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21-ம் தேதி மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற் கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. திமுக சார்பில் ஏற்கெனவே போட்டியிட்ட என்.மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட இருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளரை அறிவிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.

ஏற்கெனவே போட்டியிட்ட கங்கை அமரனை மீண்டும் நிறுத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தலில் போட்டியிட அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தனது செல்போனையும் அவர் சுவிட்ச்ஆப் செய்துள்ளார். இதனால், பாஜக தலைவர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கங்கை அமரனை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மகனும், நடிகருமான பிரேம்ஜி அமரனிடம் கேட்டபோது, ‘‘அப்பா சொந்த வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். 2 வாரங்களுக்குப் பிறகே சென்னை திரும்புவார்’’ என்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிக்குழு கூட்டம் நடந்தது. ‘‘இப்போதைய சூழ்நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிப்பதுதான் நல்லது’’ என்று அந்தக் கூட்டத்தில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வேறு சில நிர்வாகிகள், ‘‘மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது என்ன காரணம் சொல்லி தேர்தலை புறக்கணிக்க முடியும்? ஏற்கெனவே, அதிமுகவை பின்னணியில் இருந்து பாஜக இயக்குவதாக பெயர் உள்ளது. இந்த நிலையில், தேர்தலையும் புறக்கணிப்பது நல்லது அல்ல. அவ்வாறு செய்தால், அதிமுக மீதான அவப்பெயர், அதிருப்தி ஆகியவை பாஜக மீதும் விழும். எனவே, ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும்’’ என்று அவர் கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது. உடல்நிலை சரியில்லை என்பதால் கங்கை அமரன் போட்டியிட மறுத்துவிட்டார். எனவே, வேறு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து பாஜக வேட்பாளராக எம்.என்.ராஜா போட்டியிட்டார். இவர், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மருமகன். இவர் உட்பட 3 பேர் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்த 3 பேர் பட்டியலை கட்சி மேலிடத்துக்கு தமிழிசை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் போட்டியிட தமிழிசையும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால், பாஜகவுக்கு அடித்தளம் இல்லாத ஆர்.கே.நகரில் மாநிலத் தலைவர் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் பெற்றால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கூறி மேலிடம் மறுத்துவிட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்