சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கீழ் நீதிமன்றங்களைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவு படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் தீர்ப்புகளை எழுதுவதற்கு அனுமதிக்கும் பதிவாளரின் சுற்றறிக்கையை இரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

இதன்மூலம் கீழமை நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் வாதிட முடியும்; சாட்சியம் பெற முடியும்; தீர்ப்பு எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பை அளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக நாம் போராடி வரும் போதிலும், கீழமை நீதிமன்றங்களில் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், பிறமொழி பேசும் நீதிபதிகளின் வசதிக்காக, அவர்கள் ஆங்கிலத்திலும் தீர்ப்பளிக்கலாம் என்று 1994 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். அடுத்த சில மாதங்களிலேயே அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சீனிவாசன் தலைமையிலான அமர்வு இந்த சுற்றறிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்தது.

எனினும், தமிழுக்கு எதிரான இந்த சுற்றறிக்கையை நீக்க அப்போதிருந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின் 20 ஆண்டுகள் கழித்து இப்போது தான் கீழமை நீதிமன்றங்களில் தமிழ் முழுமையாக ஆட்சி செய்யும் நிலை உருவாகியிருக்கிறது. இது தொடர்பான தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவு படுத்த வேண்டும்.

அதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக்கப்படுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அரசும், வழக்கறிஞர்களும் இணைந்து மேம்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் தமிழில் வாதாடுவதற்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் பேசும் வழக்கறிஞர்கள் அனைவரும் இயன்றவரை தமிழிலேயே வாதாட வேண்டும். இதற்கு வசதியாக தமிழ் சட்ட புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட நூலகத்தை அரசு அமைத்துத்தர வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தியதை ஏற்று, இதற்கான தீர்மானத்தை 06.12.2006 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அப்போது உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் அஜித் பிரகாஷ் ஷாவும் இந்த முயற்சிக்குத் துணை நின்றார். நீதியரசர் தெரிவித்த யோசனைகளின்படி, நீதிமன்ற நடவடிக்கைகளை மொழியாக்கம் செய்ய மொழிபெயர்ப்பாளர்கள், குறிப்பெடுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்படுவார்கள்; உயர்நீதிமன்ற கணினிகளில் தமிழ் மென்பொருள் வசதி ஏற்படுத்தப்படும்; தீர்ப்புத் திரட்டு என்ற பெயரில் வெளியாகும் தமிழ் இதழில் குறைந்த எண்ணிக்கையிலேயே தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையை மாற்றி, அதிக எண்ணிக்கையிலான தீர்ப்புகளை முழுமையான மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழ் சட்ட புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட நூலகம் அமைத்துத் தரப்படும்; அந்த நூலகத்திற்கு சட்ட மொழிபெயர்ப்புகள் மற்றும் சொல்லகராதிகள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தரப்படும் என சட்டப்பேரவைத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கலைஞர் உறுதியளித்தார்.

ஆனால், அதன்பின் 8 ஆண்டுகள் ஆனபிறகும் இவற்றில் எந்த வசதியும் செய்துதரப்படவில்லை. அதேநேரத்தில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மட்டும் தமிழக ஆட்சியாளர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் என உதட்டளவில் மட்டும் பேசுவதை விடுத்து தமிழை அலுவல் மொழியாக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளத்தளவிலான செயல்பாட்டைக் காட்ட வேண்டும்.

அத்துடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றோ அல்லது தேவைப்பட்டால் புதிய தீர்மானத்தை நிறைவேற்றியோ சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்படுவதற்கு தமிழக அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

28 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்