அலசல்: எப்போது பாடம் கற்கப் போகிறார்கள்?

By செய்திப்பிரிவு

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யக் கூடாது. ‘பொன்சி திட்டம்’ என கவர்ச்சிகரமான திட்டங்களில் மக்கள் ஏமாறக்கூடாது என அவ்வப்போது ரிசர்வ் வங்கி எச்சரிக்கை சுற்றறிக்கை வெளியிடுகிறது. சரி, கூட்டுறவு வங்கியில் தங்களது சேமிப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்று முடிவெடுத்த மக்களுக்கும் கடந்த வாரம் பேரிடியை தூக்கிப் போட்டது ரிசர்வ் வங்கி.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் சேமிப்புக் கணக்கில் பணம் போட்ட பொதுமக்கள் தங்கள் சேமிப்பிலிருந்து ரூ.1,000-த்துக்கு மேல் எடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அத்துடன் பிஎம்சி வங்கியின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக புதிதாக டெபாசிட்களை ஏற்கவும், புதிய கடன் வழங்கவும் 6 மாதத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்தது. 6 மாநிலங்களில் 137 கிளைகளுடன் லட்சக்கணக்கான டெபாசிட்தாரர்களைக் கொண்ட இந்த வங்கியின் முன்பு சேமிப்புக் கணக்கு வைத்திருந்த பொதுமக்கள் திரண்டனர்.

கூட்டுறவு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு வர்த்தகர்கள் மற்றும் அன்றாட கூலி வேலைக்குச் செல்பவர்கள். 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கிக்கு மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாட்டில் உள்ள 10 பெரிய கூட்டுறவு வங்கிகளில் பிரதான வங்கியாகத் திகழும் பிஎம்சி வங்கிக்கு ஏன் இந்த நிலை? பிஎம்சி வங்கி கடன் வழங்கிய நிறுவனங்களுள் ஒன்று ஹவுசிங் டெவலப்மென்ட் மற்றும் இன்பிராஸ்டிரக்சர் லிமிடெட் (ஹெச்டிஐஎல்). இந்நிறுவனத்துக்கும் பிஎம்சி வங்கியின் தலைவர் எஸ் வார்யாம் சிங்குக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனமான ஹெச்டிஐஎல், பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிஎம்சி வங்கியிலும் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்தவில்லை. இந்நிறுவனத்துக்குள்ள கடன் பொறுப்பு ரூ.2,500 கோடியாகும். இதில் பிஎம்சி மட்டுமே ரூ.400 கோடி அளித்துள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் ஹெச்டிஐஎல் நிறு
வனம் நிலுவைத் தொகையை செலுத்தாத நிலையில் அதை வாராக் கடனாக பிஎம்சி வங்கி தெரிவிக்கவேயில்லை. இந்த விஷயம் முன்னரே தெரியாமல் போயிருக்குமா என்பது புரியாத புதிர்.

பிஎம்சி வங்கியின் தலைவர் எஸ்.வார்யாம் சிங், ஹெச்டிஐஎல் நிறுவன இயக்குநர் குழுவில் இடம்பெற்றிருந்தது முன்னரே ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் போயிருக்குமா?
ஒரு நிறுவனத்துக்கு கடன் வழங்க முடிவெடுக்கும் போது அது பற்றி தீர்மானிக்கும் குழுவில் நிறுவனத்துடன் தொடர்புடைய நண்பர், உறவினர் யாரும் இடம்பெற்றிருக்கக் கூடாது என்ற அடிப்படை விதி கூட இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் கூட்டாக ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த பிறகுதான், வங்கி உத்திரவாத கடிதம் அளிப்பதில் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. ஒவ்வொரு முறையும் தவறுகள் நடந்த பிறகுதான் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

வங்கிகள் கடன் வழங்குவது மற்றும் அதை வசூலிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் வங்கிக்கும், வங்கி அதிகாரிகளுக்குமான பிரச்சினை. இதில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும். தவறு நடந்த பிறகுதான் பாடம் கற்போம் என்று பிடிவாதமாக இருந்தால், இன்று பிஎம்சி வங்கி, நாளை மற்றொரு வங்கி எனத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்