உன்னால் முடியும்: மாத்தி யோசித்த விவசாயி!

By நீரை மகேந்திரன்

விவசாய உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கே விற்க முடியாதா என்பது விவசாயிகளுக்கே உள்ள ஏக்கம். அந்த ஏக்கத்தை எண்ணமாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் ஆரணியைச் சேர்ந்த அச்சுதன்.

எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்ட தாரி. விவசாயம்தான் பூர்வீகத் தொழில், ஆனால் மற்ற விவசாயிகளைப் போல, கிடைத்தது போதும் என முடங்கிவிட வில்லை. நிர்வாக ரீதியான சில முயற்சிகள் மேற்கொண்டு, விவசாய உற்பத்திகளை வர்த்தகம் செய்து வருகிறார். அவரது தொழில்முயற்சியின் பலனாக பல விவசாயிகளுக்கும், அவருக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. அவரது அனுபவங்களை இந்த வாரம் வணிக வீதியில் பகிர்ந்து கொள்கிறோம். விவசாயம்தான் பூர்வீகத் தொழில். அப்பா நெல், கரும்பு, தென்னை என பல பயிர்களை பயிரிட்டு வந்தார்.

எனக்கு படிக்கும் காலத்தில் விவசாயம் குறித்த அக்கறை எல்லாம் கிடையாது. ஆனால் அப்பா கஷ்டப்பட்டு உழைப்பதற்கு பெரிய பலனில்லாமல் இருக்கிறதே என்கிற எண்ணம் மட்டும் ஓடும். பொறியியல் படித்த பிறகு சென்னையில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். அப்பா பார்த்து வந்த விவசாயத்தில் சில நேரங்களில் சரியான விளைச்சல் இருக்காது. வெளிநாடுகளில் சிறிய இடத்தை வைத்து லாபகரமாக விவசாயம் செய்கிறார்கள். ஆனால் இங்கு மட்டும் ஏன் அது சாத்தியமாகவில்லை என யோசிப்பேன். அவ்வப்போது இணை யத்தில் தேடுவேன். அப்படி பத்து வருடங் களுக்கு முன்பு எடுத்த முடிவுதான் விவசா யத்தை நோக்கி என்னை இழுத்து வந்தது.

மண் பரிசோதனை, இயற்கை விவசாயம், ஜீரோ பட்ஜெட் போன்றவை எனக்கு புதிய விஷயங்களாகப்பட்டது. இதை எங்களது நிலத்திலேயே முயற்சித்து பார்க்க, அது குறித்து மேலும் பல விவரங்களை திரட்டினேன். இதற்காக விவசாய கருத் தரங்குகள், விவசாய பல்கலைக்கழக பயிற்சிகள் என பல ஊர்களுக்கு அலைந் திருக்கிறேன். சென்னையில் பார்த்துவந்த வேலையையும் இதற்காக விட்டுவிட்டேன். ஓரளவு தெரிந்து கொண்ட பிறகு, இந்த விவசாய முறைகளை அப்பாவுக்கு விளக்கியதுடன், மெல்ல மெல்ல விவசாயத்தை எனது தொழிலாக்கிக் கொண்டேன். அதாவது முழுமையான விவசாயியாக மாறிவிட்டேன்.

இதற்கு அடுத்து எனது திட்டம் நாம் விளைவிப்பதை நேரடியாக வாங்குபவர்களுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான். இதற்கேற்ப நேரடியாக விற்பனை செய்யும் கீரைகள், காய்கள் போன்ற பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்கியது. எனது உற்பத்தியை நான் மட்டும் விற்றால், அதை தொழில் முறையிலான வர்த்தகமாக்க முடியாது என்பதால், பல ஊர்களிலிருந்தும் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை வாங்கி அதை வர்த்தகம் செய்வது என திட்டமிட்டேன்.

எனது இந்த திட்டத்தில் விருப்பம் கொண்டு மேலும் 15 விவசாயிகள் சேர்ந்தனர். நாங்கள் 15 பேரும் ஆளுக்கு 50 ஆயிரம் முதலீடு செய்து முதலில் நிறுவனமாக பதிவு செய்தோம். ஆரணியில் விற்பனை மையம் மற்றும் அலுவலகம் தொடங்கினோம். இதற்கு பிறகு இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளை ஒருங்கிணைத்தேன். எங்களோடு இணைந்த பிறகு, இயற்கை முறையில் விளைவிக்கிறார்களா என்பதை கண்காணிக்க நேரடியாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று பார்த்து வருவோம். தினசரி கணக்கு வழக்குகளை இரண்டு விவசாயிகள் வீதம் கவனித்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் விட்டுச் சென்ற வேலைகளை அடுத்த நாள் வருபவர்கள் தொடர்வார்கள். பொருட்களின் விற்பனை யிலிருந்து கிடைக்கும் லாபத்தில் பங்கு கிடைக்கும்.

3 வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவ னத்தை தொடங்கினோம். இன்று பல ஊர் களுக்கும் எங்களது இயற்கை உற்பத்தி பொருட்கள் சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நிரந்தர வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது பல பொருட்களையும் விளை விக்கும் சுமார் 500 விவசாயிகள் உறுப்பி னர்களாக உள்ளனர். நவீன முறையிலான விவசாயத்தில் தொழில்முனைவோர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்தான். ஆனால் இயற்கை முறையிலான விவசாயத்தில் இந்த தொழில்முனைவு நடவடிக்கை சாதாரணமானது அல்ல என்பதை இந்த மூன்று ஆண்டு அனுபவம் கொடுக்கிறது.

ஆனால் அதிகரித்து வரும் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு எங்களை மேலும் துடிப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்றார். ஊருக்கே சோறு போடும் விவசாயிகள் வாழ்க்கையும் உயர்வடைந்தால்தானே விவசாயத் தொழிலும் சிறந்து பலரையும் ஈர்க்கும்!

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

கல்வி

12 hours ago

மேலும்