`ஸ்மார்ட் சிட்டி’ - ஒரு கவர்ச்சித் திட்டமா?

By நீரை மகேந்திரன்

சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது என்பது நமக்கு தெரியும். ஏனென்றால் அது உண்மை. ஆனால் மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கிறது என அதிருப்தி அதிகரித்துவரும் நிலையிலும், ஒளிரும் இந்தியா என்று நம்பச் சொல்கிறது. அப்படியான ஒளிரும் இந்தியா திட்டங்களில் ஒரு கவர்ச்சிகரமான திட்டம்தான் ஸ்மார்ட் சிட்டி.

மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும் முதல் பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெருமை பொங்க இந்தியாவிஅல் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கப்படும் என்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான புதிய நகரங்கள் உருவாக்கப்படுமா அல்லது ஏற்கெனவே உள்ள நகரங்கள் மேம்படுத்தப்படுமா என்கிற குழப்பம் அப்போது இருந்தது. அந்த குழப்பம் இப்போது வரை தீரவில்லை.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி இடங்கள் எல்லாமே ஏற்கெனவே வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள். இந்த நகரங்களை தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டமா என்பதையும் அரசு விளக்கவில்லை. அந்த வகையில் இதுவரையில் நான்கு கட்டமாக 90 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. நான்காவது கட்டமாக சமீபத்தில் 30 நகரங்களின் பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்படும் நகரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர், மின்சார வசதி, கழிவுநீர் மேலாண்மை, ஆரோக்கியம், இயற்கை வளங்களை கவனமாக கையாளுவது, மின் சிக்கனம், பல்வேறு சேவை மையங்கள், வர்த்தக மற்றும் பொருளாதார கட்டமைப்புகள், முதலீடுகளை ஈர்ப்பது போன்ற திட்டங்களை மேற்கொள்வதுதான் இலக்கு.

தவிர அறிவிக்கப்பட்ட நகரங்களில் சர்வதேச தரத்துக்கு ஏற்ப வைஃபை இணைப்பு, பாதாள சாக்கடை, தெருவிளக்குகள், பார்க்கிங் மற்றும் நடைபாதைகள், இணைப்பு சாலை வசதிகள் என அனைத்தும் மேம்படுத்தப்படும்.

இந்த ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், 60% வரை உற்பத்தி தொழில்களுக்கும், சேவை மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கு 40% இடம் ஒதுக்கப்படும். அனைத்து அனுமதிகளும் உடனடியாகக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டன.

ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதில் முதற்கட்டமாக அறிவித்த நகரங்களில் ஒன்றில்கூட திட்டப் பணிகளில் எந்த முன்னேற்றமுமில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையிலான பணிகளில் இதுவரையில் 6.3 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டிக்காக ரூ.1.3 லட்சம் கோடி மதிப்பில் 2,895 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் தற்போது வரை 181 திட்டங்கள் மட்டுமே செயலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 6,413 கோடி மதிப்பிலான திட்டங்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 1.11 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வெறுமனே திட்ட அறிக்கை தயாரிப்பு என்கிற நிலையிலேயே உள்ளது என்பதை சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிவிப்பு தவிர நகர்ப்புற மேம்பாட்டுக்கு என்று தனியாக அறிவிக்கப்பட்ட அடல் மிஷன் ஆப் ரிஜுவனேஷன் மற்றும் டிரான்ஸ்பர்மேஷன் திட்டமும் (ATAL MISSION FOR REJUVENATION AND URBAN TRANSFORMATION(AMRUT)இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் 4,672 திட்டங்கள் ரூ. 77,640 கோடிக்கு மதிப்பிடப்பட்டன.

இந்த திட்டத்தில் இதுவரையில் 23 சதவீத திட்டங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுவரை 1,075 திட்டங்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. தவிர ரூ.26,213 கோடி மதிப்பிலான 1,507 திட்டங்கள் ஒப்பந்த புள்ளி என்கிற நிலையிலேயே உள்ளன.

அதாவது இந்த இரண்டு அறிவிப்புகளின் கீழ் இதுவரையில் ஒரு திட்டம்கூட முழுமையாக முடிக்கப்படாதது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைவிடவும் முக்கியமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு என்று தனியாக smartcities.gov.in என்கிற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த இணையதளத்தில் ஸ்மார்ட் சிட்டி குறித்து முழுமையான தகவல்கள்கூட இல்லை என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சம்!.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 90 நகரங்கள் தவிர நாடு முழுவதும் 500 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் இந்த இணையத்திலும் இல்லை. இதுவரை அறிவிக்கபட்டுள்ள 90 ஸ்மார்ட் சிட்டிகளில் 20 நகரங்களுக்கான விவரங்கள் மட்டுமே தற்போதுவரை உள்ளது.

தமிழகத்தில்

இதுபோன்ற ஸ்மார்ட் நகரங்கள் மூலம் இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள இடமாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கை நிலையிலேயே உள்ளது என்கின்றனர். இதனுடன் சேர்த்து கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர் என அனைத்து மாநகராட்சிகளும் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்த மத்திய அரசு அறிவித்தது.

சமீபத்தில் பேசிய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முழு பொறுப்பும் மத்திய அரசு வைத்துக் கொள்ளாமல், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றார். மேலும் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும், புதிய வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறினார். ஆனால் மாநிலங்களின் நிதி ஆதாரத்தை (ஜிஎஸ்டி வாயிலாக) மத்திய அரசு எடுத்துக் கொண்ட பிறகு இதற்கான போதிய நிதியை மாநில அரசால் ஒதுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் அதிகாரிகள்.

திட்ட உத்தேச முதலீடு எவ்வளவு, எப்போது தொடங்கப்படும், எப்போது முடிக்கப்படும், எவ்வளவு தொழிற்சாலைகள் வரும், மக்களின் வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதெல்லாம் தெரியாமல் கனவு நகரங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது மத்திய அரசு. அதற்கு பதில் ஒரு மாதிரி நகரத்தை உருவாக்கி காட்டினால் வாய்ச்சொல் திட்டங்கள் மீது குறைந்தபட்ச நம்பிக்கையாவது மக்களுக்கு உருவாகும். இல்லையெனில் ஸ்மார்ட் சிட்டி என்பது மேலும் ஒரு கவர்ச்சி திட்டமாக காகிதத்தில் மட்டுமே இருக்கும்.

-maheswaran. p@thehindutamil. co. in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

க்ரைம்

4 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்