தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 13: இசைந்து வாழ்ந்தால் வெற்றி

By பாமயன்

கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி கூட

கட்டுக்கடங்காத யானையைக் கொன்றுவிட முடியும்

- பண்ணை வடிவமைப்பின் அடுத்த விதி, இயற்கையுடன் ஒத்திசைந்து செயல்படுதல். இதன் மூலம் மிக எளிமையாகப் பயன்களைப் பெற முடியும்.

காற்று, மழை, வெயில் போன்ற இயற்கையின் ஆற்றல்களும், புயல், வெப்பம் போன்ற இயற்கையின் போக்குகளும், சாதாரண மக்களால் கட்டுப்படுத்த முடியாதவை. வேகமாகப் பாயும் வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவதைவிட, வெள்ளத்தின் போக்குக்கு ஏற்ப நீந்திக் கரை சேருவது எளிமையானது இல்லையா! இந்த அடிப்படை விதியை மனத்தில் கொண்டு பண்ணையை வடிவமைக்க வேண்டும்.

நீரின் போக்கில் குட்டை

நமது பண்ணையில் ஒரு பண்ணைக் குட்டையை அமைப்பதற்கு ஏற்றதொரு இடத்தைத் தேர்வு செய்ய நீரோட்டத்தின் போக்கை முதலில் அறிய வேண்டும். இயற்கையாக நீர் ஓடும் பாதையைக் கண்டறிந்து, அதற்கேற்ப அமைக்க வேண்டும். பண்ணையின் உயரமான பகுதியிலிருந்து நீர் ஓடிவரும். அவ்வாறு ஓடிவரும் நீரைப் பள்ளத்தில் தேக்க வேண்டும். அதற்கு மாறாகத் தண்ணீர் வழிந்தோடிவிடும் மேட்டுப் பகுதியில் குளத்தை அமைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நீர் கிடைப்பது குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், சரிவின் அளவு அதிகரித்துக் கரைகள் உடைந்துபோகும் சாத்தியமும் உண்டு.

நல்ல பூச்சி ஒழிப்பு

பயிர்களைப் பூச்சிகள் தாக்கும்போது உடனடியாகப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து அவற்றைக் கொன்றுவிட்டால் பிரச்சினை தீர்ந்தது என்று நினைக்கிறோம். ஆனால், இயற்கையில் எண்ணற்ற எதிர்ப்பூச்சிகள் ‘தீமை' செய்யும் பூச்சிகளைத் தின்னக் காத்துக்கொண்டிருக்கின்றன. நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள், நன்மை செய்யும் இந்தப் பூச்சிகளையும் சேர்த்தே கொன்றுவிடுகின்றன. இதனால் அடுத்த தலைமுறையில் எதிரிகள் இல்லாமல் மிக வேகமாகப் பயிர்களைத் தின்ன ஆரம்பிக்கும் தீமைப் பூச்சிகள் பல்கிப் பெருகிவிடுகின்றன. இது பேரழிவைக் கொண்டுவந்து சேர்க்கிறது.

களை தரும் ஊட்டம்

களைகளைப் பற்றியும் நமக்குத் தவறான கருத்து உள்ளது. அதாவது களைகள் முற்றிலும் ஆபத்தானவை, அவற்றை ஒழித்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறோம். உண்மையில் களைகள், நாம் கற்பனை செய்யும் அளவுக்கு மோசமானவை அல்ல. அடிப்படையில் மண் வளம் பெறுவதற்கான வேலைகளை அவையும் செய்கின்றன. ஆழமான வேரைக் கொண்ட களைகள், மண்ணின் அடியில் உள்ள ஊட்டங்களை மேலே இழுத்துக்கொண்டு வந்து, மற்ற பயிர்களுக்குக் கொடுக்கின்றன. பல களைகள் மண் அரிப்பைத் தடுத்துப் போர்வை போன்ற மூடாக்கு பயிர்களாக விளங்குகின்றன.

அதேபோல இயற்கையாக உள்ள கட்டமைப்புகளில், அதற்கேற்ற வகையில் சிறிய மாற்றங்களைச் செய்துகொண்டால் பண்ணையை வடிவமைப்பதற்கான செலவும் குறையும். எடுத்துக்காட்டாக, மேடான பகுதியில் கொட்டகை அமைப்பது வசதி என்று கருதினால், ஏற்கெனவே உள்ள மேட்டுப் பகுதியைப் பயன்படுத்த வேண்டும்.

அதற்குப் பதிலாகப் பள்ளமான இடத்தைத் தேர்வு செய்து, அதில் பெருமளவு மண்ணைக் கொட்டிய பின்னர் மேடாக்கி, அதில் கொட்டகை அமைப்பது இயற்கைக்கு எதிரான செயல் என்பதில் சந்தேகமில்லை. இப்படி ஒவ்வொரு இடத்திலும் இயற்கையுடன் முரண்படாமல், இணைந்து பண்ணையை உருவாக்குவதுதான் அடிப்படைத் தேவை.

(அடுத்த வாரம்: சிக்கலிலேயே தீர்வும் உள்ளது)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

5 mins ago

வாழ்வியல்

29 mins ago

தமிழகம்

45 mins ago

ஆன்மிகம்

3 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்