கன்னியாகுமரி பெண் விவசாயியின் அசத்தும் இயற்கை அன்னாசி

By என்.சுவாமிநாதன்

இயற்கை விவசாய முறையில் ரப்பர் மரங்களுக்கு இடையே அன்னாசியை ஊடுபயிராகப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் கன்னியாகுமரி பெண் விவசாயி. ரப்பருக்கான விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், இது வரவேற்கத் தகுந்த மாற்றமாகக் கருதப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் ராணி. இந்த மாவட்டத்துக்கே உரிய ரப்பர் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அதற்கிடை யில் ஊடுபயிராக அன்னாசி பயிரிட்டு, லாபம் பார்த்துள்ளார்.

"கன்னியாகுமரின்னாலே ரப்பர்தான். சாதாரணமா ரப்பர் சாகுபடிக்கு ரசாயன உரம் போடுவாங்க. ஆனால், நான் ரப்பரை முழுக்க முழுக்க இயற்கை முறையில்தான் சாகுபடி செய்றேன். 82 சென்ட் நிலத்தில் ரப்பர் போட்டிருந்தேன். என் தோட்டத்து ரப்பர் மரங்களுக்கு 18 வயசாகுது. ஆனா, இப்போ ரப்பர் விலை சரிஞ்சு போச்சு. நானும் அதனால நஷ்டப்பட்டேன்" என்கிறார் கிரேஸ் ராணி.

முதல் மூன்று வருஷம், ரப்பருக்கு ஊடு பயிராகக் கத்தரி, வெண்டை, புடலை போன்ற காய்கறிகளை நடவு செய்திருக்கிறார். பொதுவாகவே ரப்பர் மரம் வளர வளர, அதன் வேர் மண்ணின் மேல் பகுதிக்கு வந்துவிடும். அதனால் ரொம்ப காலத்துக்குக் காய்கறிகளை ஊடுபயிராகப் பயிரிட முடியாது.

"அப்போதான் பேச்சிப்பாறைல உள்ள வேளாண் அறிவியல் மையம் மூலமா அன்னாசி சாகுபடி பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சரி, ரப்பர்தான் கைகொடுக்கலை. ஊடுபயிராக அன்னாசிய போடுவோம்னு தோணுச்சு. ரப்பர் மரங்கள் பெருசா வளர்ந்ததும் ஊடுபயிரா அன்னாசி பயிரிட்டேன். அதுவும் இயற்கை முறை சாகுபடிதான். இப்ப அன்னாசில அசத்தலா வருமானம் கிடைக்குது" என்கிறார் கிரேஸ் ராணி.

வாழையைப் போல்

இவர் தோட்டத்தில் தற்போது 125 ரப்பர் மரங்கள் உள்ளன. மரத்துக்கு மரம் பத்து அடி இடைவெளி விட்டு அன்னாசி பயிரிட்டிருக்கிறார். அன்னாசி, மழையை மட்டுமே நம்பும் மானாவாரி பயிர். இதன் வளர்ச் சிக்கு வெப்பமும், நிழலும் சரிசமமாக இருக்க வேண்டும். அன்னாசியை ஒரு தடவை நட்டால் போதும், வாழையைப் போல் பக்கக் கன்னு விட்டுப் பரவும்.

அன்னாசியின் ஆயுள் காலம் ஓராண்டு. செம்மண்ணாக இருந் தால் நல்ல மகசூல் கிடைக்கும். தனிப் பயிராக நடும்போது ஏக்கருக்கு 10,000 செடிவரை நடவு செய்யலாம். இவர் ஊடுபயிராகப் போட்டிருப்பதால், தொடக்கத்தில் செடிகளை நடவு செய்திருந்தார். அவை பக்கக் கன்னு விட்டுப் பரவி, இப்போது ஆயிரத்துக்கும் மேல் அன்னாசிகள் பூத்திருக்கின்றன. நல்ல மகசூலும் கிடைத்திருக்கிறது.

நோய் தாக்காது

"ரப்பர் மரங்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை 200 கிலோ மண்புழு உரம் போடுவேன். இதை ரப்பருக்குப் போடும்போது, ஊடுபயிராக இருக்கும் அன்னாசி, அதுக்குத் தேவையானதை எடுத்துக்குது. அன்னாசிக்குன்னு தனியா எந்த உரமும் போடுறதில்லை.

தேவைப்பட்டால் இயற்கை மூலிகை பூச்சி விரட்டியும் தயாரிச்சு தெளிப்பேன். பொதுவாகவே அன்னாசிக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம். இதனால் எந்த நோயும் தாக்காது. ஊடுபயிர் என்பதால் அதிகமா களை எடுக்குற வேலையும் இருக்காது.

அன்னாசியில் வாரா வாரம் மகசூல் கிடைக்குது. வாரத்துக்குக் குறைந்தபட்சம் 25 காய்ன்னு வைத்தால்கூட வருடத்துக்கு 1,200 காய் கிடைக்கும், கூடுதல் செலவு இல்லாமல். ரப்பர் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், அன்னாசி மூலம் வரும் வருமானம், அதை ஈடுகட்டுகிறது" என்கிறார்.

ஆர்கானிக் பஜார்

அன்னாசியைச் செடியில் இருந்து பறித்ததும், அந்தச் செடியைப் பிடுங்கி, ரப்பர் மரத்துக்கு உரமாகப் போட்டு விடுகிறார். அறுவடை செய்த அன்னாசியைக் காஞ்சிரக் கோட்டில், இயற்கை விவசாயிகள் சேர்ந்து நடத்தும் ‘ஆர்கானிக் பஜாரில்’ விற்பனை செய்கிறார். நல்ல லாபம் கிடைக்கிறது.

ரப்பர் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைவதால் லாபம் இல்லை என்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் பலரும் ரப்பர் பால் எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களும் இது போல மாற்றி யோசித்தால், ரப்பர் விலை வீழ்ந்தாலும் விவசாயியின் நிலை வீழாமல் தப்பிக்கலாம், கிரேஸ் ராணி அதற்கு அத்தாட்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்