கோவையைக் கலக்கும் சர்க்கரை ராணி: கறுப்பு தர்பூசணி விளைச்சல் அமோகம்

By கா.சு.வேலாயுதன்

“தர்பூசணி மற்றும் முலாம்பழச் சாகுபடியில் மூன்று மடங்கு மகசூல் பெற வேண்டுமானால் மல்சிங் சீட் மூடாக்கு விவசாயம் செய்வது சிறந்த பலன் தரும்!” என்கிறார் கோவையைச் சேர்ந்த விவசாயி ஓம்பிரகாஷ்.

வெளி மாநிலப் புகழ்

கேரளத்தில் சுகர் குவீன் - சர்க்கரை ராணி என்று பெயர் பெற்றுள்ள கறுப்பு தர்பூசணியை கோவை சுண்டக்காமுத்தூரில் 3 ஆண்டுகளாக மல்சிங் பேப்பரால் மூடும் மூடாக்கு முறையில் பயிரிட்டு அமோக விளைச்சலைக் கண்டுவருகிறார் இவர். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"இந்த சுகர் குவீனுக்கு கேரளத்தில் நல்ல கிராக்கி. அங்குள்ள மூன்று நட்சத்திர, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இதை அதிகமாகக் காணலாம். ஹைதராபாத், வட இந்தியாவுக்கும் அதிகம் போகிறது. இது சாதாரண நிலங்களில் வளருவதில்லை. நல்ல குளிர், நல்ல வெப்பம் இருக்கும் பகுதிகளில்தான் வளரும். அப்படியே விதைத்தாலும் மல்சிங் பேப்பர் மூலம் மூடாக்கு செய்யாமல் விதைத்தால் பாதி விளைச்சலைக்கூடப் பார்க்க முடியாது.

25 டன் மகசூல்

மல்சிங் சீட் 30 முதல் 50 மைக்ரான்வரை மார்க்கெட்டில் கிடைக்கிறது. இது சாதாரணப் பாலீத்தின் பை மாதிரி இருக்காது. வெளியே கறுப்பு நிறமாகவும், உள்ளே வெண்மை கோட்டிங்கில் ஈரப்பதத்தை நிலைநிறுத்தும் விதமாகவும் இருக்கும்.

ஒரு ஏக்கருக்கு 75 கிலோ மல்சிங் சீட் தேவைப்படும். விதை, உரம், சொட்டுநீர் பாசன டியூப் என மொத்தம் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவு செய்தால் ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் 55 நாளில் அறுவடை செய்ய முடியும். 25-லிருந்து 30 நாட்களில் 6 முதல் 8 அடி நீளத்துக்குச் செடி வளரும். அதனால் புதர் ஏறிடும்.

மல்சிங் சீட் போடுவதால் புதர் ஏறுவது குறைகிறது. அப்படி விதைத்தால் ஒரு செடிக்கு 2 முதல் 3 காய்கள் வரும். ஒரு காய் 5 கிலோ முதல் 6 கிலோ எடை இருக்கும். ஒரு ஏக்கருக்கு 25 டன் மகசூல் கிடைக்கும். போன வருஷம் இந்தக் கறுப்பு தர்பூசணி மார்க்கெட்டில் கிலோ ரூ.16 வரை விற்றது. இப்போது ரூ.15-க்கு போகிறது. இன்னும் வெயில் கூடும் போது கூடுதல் விலைக்குப் போகும்!" என்றார்.

கையைக் கடிக்கவில்லை

பாத்தியில் மல்சிங் சீட் விரித்து அதில் துளை ஏற்படுத்தி நடவு செய்கிறார்கள். சொட்டுநீர் பாசனத்தில் யூரியா, பொட்டாஷ், மோனோ அமோனியம் பாஸ்பேட், கால்சியம் நைட்ரேட் போன்றவற்றை கொடியின் வளர்ச்சிக்கு ஏற்பப் போடுகிறார்கள். ஒரு முறை போடப்படும் மல்சிங் பேப்பர் நான்கு மகசூல்வரை, அதாவது 55x4 என 220 நாட்களுக்குப் பயன்படுத்த முடிகிறதாம்.

“முன்பெல்லாம் அந்தியூர், சத்திய மங்கலம், சாம்ராஜ் நகர் பகுதிகளில்தான் இந்த விவசாயம் நடந்துவந்தது. ஒரு பரீட்சார்த்த முறையில் செய்து பார்க்கலாம் என்று நாற்று வாங்கி வந்து கோவையில் பயிரிட்டேன். இப்போது இதைப் பார்த்துச் சுற்றுப்புற விவசாயிகள் பலரும் என்னிடம் யோசனை கேட்டு, இந்த வகை விவசாயத்துக்கு மாறிவிட்டனர். மூன்று வருடங்கள் ஆயிற்று இந்த விவசாயத்துக்கு வந்து ஒரு தடவைகூட விளைச்சலோ, விலையோ கையைக் கடித்ததில்லை!’’ என்கிறார் ஓம்பிரகாஷ், நம்பிக்கையுடன்.

விவசாயி ஓம்பிரகாஷை தொடர்புகொள்ள: 94432 47294

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

க்ரைம்

10 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

க்ரைம்

50 mins ago

இந்தியா

48 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்