காவிரி டெல்டாவில் மலைப் பிரதேசக் காய்கறிகள்: மாற்றத்துக்கு வித்திட்ட முன்னோடி விவசாயி

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சை டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒரு முன்னோடி விவசாயி மலைப் பிரதேசக் காய்கறிகளை இயற்கை முறையில், தன்னுடைய வயலிலேயே பயிரிட்டு புதுமையாகச் சந்தைப்படுத்தி வருவது அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தஞ்சை டெல்டா பகுதியில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் நெல் சாகுபடி குறையத் தொடங்கியது. அப்போது மாற்றுப் பயிர் பயிரிட டெல்டா விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

இந்த அறிவுரையை ஏற்று நெல்லுடன் கரும்பு, வாழை, உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்களை டெல்டா விவசாயிகள் பயிரிட்டுவருகின்றனர். இந்தச் சாகுபடியில் போதிய அளவு வருவாயும் உரிய மகசூலும் கிடைக்காத காரணத்தால் குறுகிய காலத்தில் அதிக வருவாய் தரக்கூடிய மலைப் பிரதேசப் பயிர்களுக்குச் சிலர் மாறிவருகின்றனர்.

இயற்கை விளைச்சல்

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியைச் சேர்ந்த சேகர் என்ற முன்னோடி விவசாயி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன்னுடைய வயலில் மலைப்பிரதேசக் காய்கறிகளைப் பயிரிட்டு, அங்கேயே சந்தைப்படுத்தி வருகிறார்.

கேரட், பீட்ரூட், நூல்கோல், காலிபிளவர், சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, பீன்ஸ், குடை மிளகாய், நீலநிற முட்டைகோஸ், பச்சை முட்டைகோஸ், வாழை, மஞ்சள், கத்தரிக்காய், பாகற்காய், கோவைக்காய் எனக் காய்கறிகளையும் பணப்பயிர்களையும் கலந்து பயிரிட்டு லாபகரமான விவசாயியாக மாறியுள்ளார்.

மூன்று மாதக் காலத்தில் காய்கறிகளை மாற்றிச் சாகுபடி செய்யும் சேகர், இயற்கை வேளாண் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளைவித்து, விளைந்த காய்கறிகளை வயலிலேயே சில்லறை விற்பனையும் செய்துவருகிறார்.

வாடிக்கையாளர் ஊக்கம்

இது குறித்து விவசாயி சேகர் பகிர்ந்துகொண்டது:

நெல்லைத் தவிர்த்து மற்ற பயிர்களுக்கு மாற டெல்டா விவசாயி களிடையே தயக்கம் உள்ளது. இந்தத் தயக்கத்தைத் துறந்துவிட்டால் விவசாயத்தில் வெற்றி பெறலாம். ஆரம்பத்தில் நானும் நெல்லும் வாழையும்தான் பயிரிட்டு வந்தேன். கொஞ்சமாக கீரை, கத்தரிக்காய், அவரைக்காய், பாகற்காய் போன்ற வற்றைப் பயிரிட்டேன். அவற்றைச் சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்தபோது, புத்தம்புதுசாகக் கிடைக்குது எனப் பலரும் வாடிக்கையாளராக மாறித் தொடர்ந்து காய்கறிகளை வாங்க ஆரம்பித்தார்கள்.

அப்போது பலரும் நாட்டுக் காய்கள் உங்களிடம் தாராளமா கிடைக்குது, அதேபோல் மலையில் விளையும் காய்கறிகள், இயற்கை சாகுபடி முறையில் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்கள்.

நேரடி அனுபவம்

மலையில் விளையும் காய்கறிகளை நாமே விளைவித்தால் என்ன என்று அப்போது தோன்றியது. உடனடியாக மலைப் பிரதேசமான கொடைக்கானல் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, அங்கு காய்கறிகள் விளைவிக்கப்படும் முறையைப் பார்வையிட்டேன். அங்குள்ள தோட்டக் கலைத் துறையினரிடம் என்னுடைய ஆர்வத்தைக் கூறினேன்.

அப்போது மூன்று மாதம் கழித்து வாருங்கள் காய்கறி சாகுபடி தொடர்பான பயிலரங்கத்தில் கலந்துகொள்ளலாம் என்றனர். அந்தப் பயிற்சிக்குச் சென்றேன். ஏராளமான புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். மலைப் பிரதேசக் காய்கறிகளின் விதைகளும் கிடைத்தன.

சுழற்சி முறை

மலைப் பிரதேசக் காய்கறிகளை விளைவிக்க வசதியாக என்னுடைய வயலில் உழவு செய்து ஆட்டுப் புழுக்கை இயற்கை உரத்தை இட்டோம். பம்பு செட் இருப்பதால் வயலில் கேரட், பீட்ரூட், காலிபிளவர், நூல்கோல், இருவகை முட்டைகோஸ், பீன்ஸ் என மலையில் விளையும் காய்கறிகளைத் தற்போது பயிரிட்டுவருகிறேன்.

இரண்டு மாதங்களிலிருந்து மூன்று மாதங்களில் இந்தப் பயிர்கள் அனைத்தும் பலன் கொடுக்கும். பின்னர் ஒரு மாதம் வயலை உழுது அப்படியே போட்டுவிட்டு, மீண்டும் காய்கறிகள் சாகுபடியை மாற்றி செயல்படுத்துவேன். எனக்கு இந்தச் சாகுபடி முறையில் நல்ல மகசூலும் லாபமும் கிடைக்கின்றன.

நேரடி விற்பனை

என் வயல் அமைந்துள்ள இடம் தஞ்சாவூர்- கும்பகோணம் மெயின் ரோட்டில் இருப்பதால் விளைவித்த காய்கறிகளை அங்கேயே சில்லறை வியாபாரமும் செய்துவருகிறேன்.

நான் மட்டுமே இந்தப் பணியில் தீவிரம் காட்டிவந்ததைப் பார்த்த என்னுடைய மகன் இன்ஜினியரிங் படிப்புக்கு இடையே, எனக்குப் பக்கபலமாக விவசாயத்துக்கு உதவி செய்துவருகிறார். தோட்டக் கலைத் துறை பயிலரங்குகளில் கொடுக்கப்படும் ஆலோசனைகளைக் கொண்டு புதிய முறைகளைப் புகுத்தி விவசாயம் செய்துவருகிறேன்.

டெல்டாவில் நெல்லை மட்டுமே பயிரிட்டுவருவதுடன், காய்கறி சாகுபடியை மேற்கொண்டால் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைப் பெற முடியும். அதே நேரத்தில் ஆரோக்கியமான காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்வதால் ஏராளமானோர் வாடிக்கையாளராகிவிடுகின்றனர். அவர்களுக்கு ஆரோக்கியமான காய்கறிகளை விளைவித்துக் கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. டெல்டா விவசாயிகள் இந்தச் சாகுபடி முறைக்கு மாறினால் மகசூலும் வருவாய் பெருக்கமும் நிச்சயம் இருக்கும்.

விவசாயி சேகரைத் தொடர்புகொள்ள : 99444 66938

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்