இயற்கைப் பாதுகாப்பில் நாங்கள் ஒரு கருவி

By பிருந்தா சீனிவாசன்

உணவு, உடை, உறைவிடம் போன்ற நமது அடிப்படைத் தேவைகள் அனைத்திலும் செயற்கையைக் கட்டுப்பாடின்றிப் புகுத்திவிட்டோம். நோய்கள் நங்கூரமிடும்போதுதான் இயற்கையைப் புறக்கணித்துவிட்டோமே என்ற பதற்றம் சுருக்கென்று குத்துகிறது.

ஆடை உற்பத்தியிலும் இதேநிலைதான். செயற்கை இழைகள், செயற்கைச் சாயங்களின் ஆட்சிதான் ஆடை உற்பத்தியில் இப்போது கோலோச்சுகிறது. செயற்கைச் சாய உற்பத்தியில் ஒரு பக்கம் அளவுக்கு அதிகமான நீர் வீணாகிறது என்றால், அதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களால் இன்னொரு பக்கம் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்துமே சீர்கெட்டுப் போகின்றன. சில செயற்கை சாயங்கள் நம் உடலுக்கும் ஊறுவிளைவிப்பவை.

இந்தப் பின்னணியில் இயற்கை பாதுகாப்புக்குத் தங்கள் பங்கைச் செலுத்தும் வகையில், புதுப்புது இயற்கை சாயங்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் ஈரோட்டைச் சேர்ந்த மூன்று நண்பர்கள்.

எல்லாமே உண்டு இயற்கையில்

ராதாகிருஷ்ணன், சிவராஜ், திருமுருகன் என்ற அந்த மூன்று நண்பர்களும் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இயற்கை சாய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காகப் பல இடங்களில் பயிற்சியும் எடுத்திருக்கிறார்கள்.

"இயற்கை சார்ந்து இயங்கக்கூடிய ஒவ்வொருவரும் எங்களுக்கு வழிகாட்டிகள்தான். நாங்கள் ஜவுளித்துறை மாணவர்கள். என் குடும்பங்களும் வழிவழியாக ஜவுளித்துறை சார்ந்து வந்தவை. கல்லூரிப் படிப்பு முடித்ததும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தபோதுதான் இயற்கை சாயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.

செயற்கை என்றைக்குமே நிலையில்லாதது, அதன் பக்க விளைவுகள் சீரமைக்க முடியாதவை என்பதை உணர்ந்தபோதுதான், முழுக்க முழுக்க இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தோம்.

ஜவுளித் துறை தொடர்பாகப் படித்திருந்ததால், சாய உற்பத்தியைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும்கூட, அதைப் பற்றி முறையான கல்வி அறிவு எங்களுக்கு இல்லை. எதிலுமே தெளிவு இருந்தால்தானே இலக்கை அடையமுடியும். அதனால் இயற்கை சாய உற்பத்தி தொடர்புடைய படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்" என்று சொல்லும் இவர்கள் திண்டுக்கல் காந்தி கிராமத்தில் இயற்கைச் சாய உற்பத்தி குறித்த படிப்பை முடித்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் இவர்களுடைய நண்பரின் உதவியோடு குறுகிய காலப் பயிற்சியையும் முடித்திருக்கிறார்கள்.

சூழலுக்கு நன்மை

படித்த படிப்பும், கற்றுக்கொண்ட பயிற்சி முறைகளும் வழிகாட்ட, சாய உற்பத்தியில் இந்த மூவர் குழு இறங்கியது. சொந்தமாக சாயப்பட்டறை இல்லாததால், வாடகைக்கு இடம்பிடித்து ஆய்வைத் தொடங்கியிருக்கிறார்கள். காலடி எடுத்து வைத்ததும், வெற்றியின் வாசல் இவர்களுக்குத் திறந்துவிடவில்லை. தொடர்ச்சியான தோல்விகளும், சோதனைகளுமே இவர்களை வரவேற்றன. ஆனால் அவற்றுக்கெல்லாம் சோர்ந்துபோகாமல் பயிற்சியைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

"முதலில் என்னென்ன தாவரங்களில் இருந்து என்னென்ன நிறங்களைப் பிரித்தெடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்தோம். ஏற்கனவே சிலர், சில நிறங்களைப் பிரித்தெடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவை எங்களுக்குக் கைகொடுத்தன. கண்ணைப் பறிக்கும் பளிச் நிறங்களும், எண்ணிக்கையில் அடங்காத வண்ணப் பிரிவுகளும்தான் செயற்கை சாயங்களின் வெற்றி.

அதே அடர்த்தியும் எண்ணிக்கையும் ஏன் இயற்கையில் சாத்தியமாகாது என்ற தேடல் எங்கள் ஆராய்ச்சியை விரிவாக்கியது. தற்போது சங்குப்பூ, சாமந்தி, செவ்வாழைத் தோல், புளியமரப்பட்டை, அவுரி, புரசம், வேலமரப்பட்டை, கரிசலாங்கண்ணி, பூந்திக்கொட்டை, நாட்டுச்சர்க்கரை, முள்ளங்கிச்சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி இயற்கை சாயங்களைத் தயாரிக்கிறோம். எங்களது சாயத் தயாரிப்பில் வெளியேறும் தண்ணீரில் எந்த ரசாயனமும் இருக்காது. அதை விவசாயத்துக்குத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதுதான் இயற்கை சாயங்களின் மகத்துவமே" என்று சொல்கிறார் சிவராஜ்.

பலகட்ட பரிசோதனைகளைத் தாண்டி, தற்போது 9 வகையான முக்கிய நிறங்களைத் தயாரித்து இவர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இயற்கைச் சாய உற்பத்தியை வணிக நோக்கில் இல்லாமல், விழிப்புணர்வுக்கான கருவியாகவே இவர்கள் பார்க்கிறார்கள். செயற்கைச் சாயத்துடன் ஒப்பிடும்போது இயற்கைச் சாயங்களின் விலை அதிகம் என்றாலும், அதற்குப் பின்னால் இருக்கும் நன்மைகளுக்காகவே பலர் தேடிவந்து வாங்குகிறார்களாம்.

"ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்டோம். கடந்த ஆண்டு முதல், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. பொதுமக்களுக்கும் இயற்கையைப் பாதுகாப்பதில் அக்கறை இருக்கிறது. அதற்கு நாங்களும் ஒரு கருவியாக இருக்கிறோம் என்பது எங்களுக்குப் பெருமிதம் தருகிறது" என்கிறார் சிவராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்