வண்ணம் தீட்டலாமா?

By குமார்

சொர்க்கமே என்றாலும் சொந்த வீடு போல் ஆகுமா? வீடு என்பது காற்று, மழை, வெயிலில் இருந்து நம்மைக் காக்கும் ஒரு கட்டிடம் மட்டுமல்ல. நம் எண்ணத்தின் ரசனையின் வெளிப்பாடு. யாரும் கட்ட முடியாத வீட்டைத்தான் கட்ட வேண்டும், அதைச் சொல்லிப் பெருமைப்பட வேண்டும் என்னும் ஆர்வம் இல்லாதவர்களில்லை. எனவேதான் வீட்டின்நிமித்தம் பெரும் பிரயத்தனங்களை மனிதர்கள் மேற்கொள்கிறார்கள்.

வீட்டின் கட்டுமானம் தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பார்த்தவுடன் தெரிவது வீட்டுக் கட்டுமானத்தின் தரமல்ல. வீட்டு வண்ணத்தின் வசீகரமே. வீடு கட்டுவதைப் பொறுத்தவரை கட்டுமானத்தில் தொழில்நுட்பங்களே ஆளுமையைச் செலுத்தும் சூழலில் வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதை நமது ரசனைத் தன்மையே

முடிவுசெய்கிறது. ஆகவே வீட்டைக் கட்டுபவர்கள் அந்தப் பணியை ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்தாலும் தங்களுக்குத் திருப்தி தரும் வண்ணத்தில் வீட்டின் பூச்சு அமைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருப்பார்கள். இப்போதெல்லாம் பளிச்சென்ற வண்ணத்திலேயே பல வீடுகள் பளபளக்கின்றன. கூடுமானவரையில் வீட்டுக்குள் குளுமையை உணரச் செய்யும் வகையில் வீடுகளுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

பளிச்சென்ற வண்ணங்களை வீட்டின் புறச்சுவர்களுக்குப் பூசும்போது வெயில், மழை போன்ற இயற்கையை அவை தாங்கி நிற்கும் என்பதால் அவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மிகவும் மென்மையான வண்ணத்தைப் பூசும்போது அது எளிதில் நிறமிழந்துவிடும் என்பதால் புறச்சுவர்களுக்கு மென்மையைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசும்போது அந்த வண்ணத்தின் வெப்பத்தைக் கிரகித்து வெளியிடும் தன்மையைக் கருத்தில்கொண்டு புறச் சுவருக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அடர்த்தியான நிறம், அதிகமான வெப்பத்தை உள்வாங்கிவைத்துக்கொள்ளும் சூழலில் சிறிது மென்மையான வண்ணத்தைப் பூசலாம்.

வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை என வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் அந்தந்த அறைகளில் நாம் புழங்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வைப் பொருத்து நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆரஞ்சு நிறம் என்பது நன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் சமூகத் தொடர்புக்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. ஆரஞ்சு வண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் துன்ப காலங்களில் தேவைப்படும் மன உறுதியைத் தரும். எப்போதும் வீட்டில் அமைதி தவழ வேண்டும், அக்கம்பக்கத்தினருடன் உறவு மேம்பட வேண்டும் என்பதை விரும்புபவர்கள் இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

மஞ்சள் நிறம் அறிவு நிரம்பிய மனத்தின் நிறமாகக் கொள்ளப்படுகிறது. இது நேர்மறையான எண்ணத்தையும், உற்சாகம் ததும்பும் மனநிலையையும், புதிதுபுதிதான எண்ணங்களையும், வசீகரமான கற்பனைகளையும் உருவாக்கும் என்கிறது வண்ணம் தொடர்பான உளவியல். அறிவும், உற்சாகமும், புத்துணர்ச்சியும் நிறைந்த சூழல் தேவைப்படுபவர்கள் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தி வீட்டுக்கு வண்ணமடிக்கலாம்.

பச்சை வண்ணத்தைப் பொறுத்தவரை, சமச்சீரான தன்மைக்கும் இணக்கமான சூழலுக்கும் உத்திரவாதமளிக்கிறது. ஏதாவது ஒரு சிக்கலான தருணத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இதயத்தின் வார்த்தைகளையும் மூளையின் சொற்களையும் நடுநிலையாக ஆராய இந்த நிறம் உதவும் என்று சொல்லப்படுகிறது. வளர்ச்சியைக் குறிக்கும் நிறமும் பச்சைதான். அதே சமயத்தில் பச்சை வண்ணம் ஒருவிதமான அதீத உரிமையுள்ள எண்ணத்தையும் உருவாக்கிவிடும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்ற மென்மையான எச்சரிக்கையும் தருகிறார்கள் வண்ணம் தொடர்பான கல்வி கற்றவர்கள்.

நீலம், நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. எந்த மோதலையும் உருவாக்காமல் இயல்பாக இயங்கச் செய்யும் வல்லமை கொண்டது இந்த நிறம். நீல நிறம் நம்பத் தகுந்தது, பொறுப்புணர்வு அளிப்பது என்று சொல்கிறது நிறங்களுக்கான உளவியல். பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையான எண்ணத்தையும் உற்பத்தி செய்வதில் நீல நிறம் சிறப்பாகச் செயல்படுகிறது. கடினமான காலங்களில் சரியான முடிவுகளை எடுக்க இந்த நிறம் உதவும் என்று சொல்கிறார்கள்

நிபுணர்கள்.கட்டிடத்தின் கூரையைப் பொறுத்தவரை வெள்ளை நிறத்தைப் பூசினால், கட்டிடத்தில் படரும் வெயிலால் உருவாகும் வெம்மையைப் பெருமளவு குறைக்க முடியும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இது ஆய்வுகள் மூலம் நிரூபணமும் ஆகியிருக்கிறது. ஆக, வீட்டுக்கான வண்ணப்பூச்சைத் தேர்ந்தெடுக்க வெறும் ரசனை மட்டும் போதாது. ஏனெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு பொருள் இருக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு உணர்வைத் தருவதாக உள்ளது.

ஆகவே வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் வண்ணத்தில் நிபுணத்துவமும் ரசனையும் கொண்ட ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

32 mins ago

விளையாட்டு

27 mins ago

கல்வி

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்