அழகும் பாதுகாப்பும்

By செய்திப்பிரிவு

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் நெடுநாள் கனவாக இருக்கும். அறைகள் எப்படி இருக்க வேண்டும். ஜன்னல்கள், கதவுகள், சுவர் எப்படி இருக்க வேண்டும் எனப் பலவிதமான எதிர்பார்ப்புகள் நமக்கு இருக்கும். மேலும் வீடு என்பது வெறும் செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. நம் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கப்போகும் ஓர் இடம். அதனால் சொந்த வீடு கட்டும் கட்டுமானப் பணிகள் விஷயங்களில் மற்றவர்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள் என்பதற்காக ஏனோதானோ என முடிவு எடுக்கக் கூடாது.

வீடு கட்டும்போது அஸ்திவாரத்தில் தொடங்கி வீட்டிற்கு வண்ணம் அடிப்பதுவரை உங்களுடைய தேர்வு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதைக் கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

* கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கைவிடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.

சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

* இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக, அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள்.

அதனால் மண்ணை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவை பரிசோதித்தாலேயே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.

* இப்போதுள்ள நவீனத் தொழிற்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டுவந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள்.

முன்புபோல கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமல்ல. அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* கட்டுமானத்திற்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும்.

24 மணி நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம். இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும்; தரத்திலும் சிறந்தவையாக இருக்கும்.

அதுபோல தேவையப் பொறுத்து அதற்குத் தகுந்த கற்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுச் சுவர்களுக்கு ஹல்லோ செங்கல் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.

* கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களைக் கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை.

அதனால் பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

* கான்கிரீட்டுக்கு வலுச் சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பிகளில் உள்ள பிசிறுகளை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பியின் மீது எவ்விதமான கறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அடையாளத்திற்காகக் கம்பிகள் மீது பெயிண்ட் அடித்திருக்கக்கூடும். அதுபோல எண்ணெய்க் கறை, சேறு இது போன்ற கறைகளையும் நீக்க வேண்டும். இம்மாதிரியான கறைகளுடன் கம்பியைக் கட்டிடப் பணிகளுக்கு உபயோகித்தால் கம்பி, சிமெண்டுடன் வலுவான பிணைப்பை உண்டாக்காமல் போய்விடும்.

* மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தரமுள்ள வயர்களை வாங்குங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிக ஆற்றல் வீணாகும் வயர்களை வாங்காதீர்கள். அதனால் மின்சாரம் வீணாகி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு உண்டாகும். சுவிட்சுகளின் விஷயத்திலும் கவனம் தேவை. மலிவான வகை சுவிட்சுகள் விபத்தை உண்டாக்கக்கூடியவையாக இருக்கும். வீட்டுக்கு விளக்குகளை அமைக்கும்போது முன்கூட்டியே திட்டமிடுங்கள். அறைக்குத் தகுந்தவாறு வண்ண விளக்குகளை அமையுங்கள்.

* வீட்டுக்கான கதவுகள், ஜன்னல்கள் செய்யும்போது வீண் கவுரவத்திற்காக எல்லாவற்றையும் மரத்தால் செய்ய வேண்டாம். சில முக்கியமான நுழைவு வாயிலை மட்டும் மரத்தைக் கொண்டு செய்யலாம். ஜன்னல்களையும் மரத்தால் செய்யலாம். ஆனால் கழிவறைக் கதவு போன்றவற்றிற்கு ரெடிமேர் பிளாஸ்டிக் கதவுகளைப் பயன்படுத்தினாலேயே போதுமானது. மரப் பொருள்களின் பயன்பாடு வீடு கட்டுவதில் அதிகம் செலவுவைக்கக்கூடியது. அதனால் அதில் கவனமாக இருங்கள். அழகும் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர ஆடம்பரம் அல்ல.

* வீட்டை ஒப்பந்த முறையில் கட்ட வேண்டுமா அல்லது பணியாளர்களை நியமித்து நீங்களே கட்டப் போகிறீர்களா என்பதை முன்பே முடிவுசெய்துகொள்ள வேண்டும். 5000 சதுர அடி அளவு வீடு கட்ட நினைப்பவர்கள் தனியாகக் கட்டுமானப் பொறியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். ஆனால் 800 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் வீடுகட்ட நினைப்பவர்களுக்குத் தனி கட்டுமானப் பொறியாளர்கள் தேவையில்லை.

அதுபோல கிராமப்புறமாக இருந்தால் ஒப்பந்தம் இல்லாமல் வீடு கட்டும் சாத்தியம் உண்டு. நகர்ப்புறமாக இருந்தால் ஒப்பந்தம்தான் சிறந்தது. அதிலும் ஒரு குழப்பம் வரும்; தொழிலார்களை மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா, அல்லது கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா என்று.

உங்களுக்கு அலுவலகத்தில் கட்டிடப் பணிகளைக் கவனிக்க விடுமுறை கிடைக்குமா என்பன போன்ற பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். நீங்கள் அருகில் இருந்து கவனிக்க முடியவில்லை என்றால் கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்ப்ந்தம் போட்டுக்கொள்வது சரி. எந்த முறையாக இருந்தாலும் தரத்தில் கவனமாக, உறுதியாக இருங்கள்.

* கட்டுமானத்தைப் பொறுத்தவரை சில புதிய யுக்திகளைப் பயன்படுத்தலாம். அதாவது கட்டிட நிபுணர் லாரிபேக்கர் கண்டுபிடித்த எலிப் பொறித் தொழில்நுட்பம் மூலம் சுவர் கட்டும்போது கட்டிடத்திற்கு ஆக வேண்டிய செங்கல் மிச்சமாகும். அதுபோல வீட்டின் அறைகளைப் பிரிப்பதற்கான சுவர்களை அதிகக் கனம் உள்ளதாக உருவாக்க வேண்டியதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 mins ago

ஜோதிடம்

19 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்